கருணா அம்மான் அம்பாரையில் வாக்கை பிரித்து விட்டு காணாமல் போய் விட்டார் என சாணக்கியன் நாடாளுமன்றத்தில் கூறுகிறார். இருபது நாளிற்கு முன்னர்தான் எனது அலுவலகத்தற்கு தேடி வந்து எனது காலைப்பிடித்து கெஞ்சினார் என தெரிவித்துள்ளார் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன்.
இன்று மட்டக்களப்பு- செங்கலடியில் ஊடகயிலாளர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கருணா அம்மான் அம்பாரை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வாக்குகளை பிரித்து விட்டு தற்போது தலைமறைவாகி விட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அண்மையில் தெரிவித்திருந்தார். அவருக்கு உண்மையிலேயே நாம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டம் விளங்காது. ஏன் என்றால் அவர் பாராளுமன்றத்தில் பொதுவாக கதைப்பதற்கு பல விடயங்கள் இருக்கின்றது ஒரு தனிநபரின் விடயத்தை போய் பாராளுமன்றத்தில் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்றால், நான்கு ஆங்கிலத்தை, சிங்களத்தை பேசினால் தாங்கள் அறிவாளிகள் என நினைக்கின்றார்கள். கருத்துக்களை தெளிவாக முன்வையுங்கள். தனிப்பட்ட முறையில் என்னை விமர்சிக்க வேண்டுமென்றால் ஒரு ஊடக சந்திப்பை ஏற்படுத்தி எம்மை விமர்சியுங்கள். அதை விடுத்து பாராளுமன்றத்தில் பேசி, பெறுமதியாக பாராளுமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
சாணக்கியன் போன்றோர் உண்மையிலேயே பாலர் வகுப்பு படிப்போர் போல்தான் செயற்படுகின்றனர் என்றுதான் நான் கூறுவேன். காரணம் அவருக்கு அறிவு இருந்தால் அவ்வாறு பேச மாட்டார்.
தமிழ் மக்களின் பிரதிநிதி என்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக பல பிரச்சினைகள் உள்ளது அதை எடுத்து வைக்க வேண்டும் என்பதை நான் அவருக்கு அன்பாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
கருணா அம்மானை தற்போது காணவில்லை என சாணக்கியன் தெரிவித்தார்.
சாணக்கியன் 20 நாட்களுக்கு முன்னர் என்னிடம் வந்து எனது காலை பிடித்து கெஞ்சி கேட்டார், வாழைச்சேனை பிரதேச சபைக்கு உதவி செய்து தர வேண்டும், தமிழ் தேசியக் கூட்டமைப்பை காப்பாற்ற வேண்டும் என. அன்று என்னுடன் பலர் செங்கலடி காரியாலயத்தில் இருந்தனர். அங்கு தான் வந்து சந்தித்தார்.
மக்களின் பிரச்சினைகள் என பல விடயங்கள் இருக்கின்றன. அவற்றை பாராளுமன்றத்தில் கதையுங்கள். கல்முனை சம்பந்தமான விடயம் தொடர்பாக குரல் கொடுங்கள் வரவேற்கப்பட வேண்டிய விடயம். நாம் எதிர்க்க வேண்டியதில்லை.
நான் இரு தடவைகள் பாராளுமன்றத்தில் இருந்து சிறந்த முறையில் அந்த நேரங்களைப் பயன்படுத்தி இருந்தேன். அதேபோன்றுதான் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இதைப் பயன்படுத்த வேண்டும்.
முஸ்லிம் பிரதிநிதித்துவம் பிரதிநிதிகளை எடுத்துக்கொண்டால் அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக தமது இருப்பை தக்க வைப்பதற்காக தான் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கின்றார்கள் ஏனைய இணத்தவர்கள் அவர்கள் கதைப்பதில்லை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கதைத்து எமது மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுங்கள் என்றார்.