கலைஞர்கள் ஒன்றுகூடும் சிறப்பு நிகழ்வு நேற்று (23) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல கலைஞர்கள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் தம்பலகாமம், கிண்ணியா, மூதூர், கட்டை பறிச்சான், புல்மோட்டை மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பிரதேசங்களை சேர்ந்த கலைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு, கலாச்சார முக்கியத்துவம், பாரம்பரிய கலை வடிவங்களின் நிலை மற்றும் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து விவாதித்தனர்.
கலைஞர்களின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்வின் போது நடனம், இசை, நாடகம், கவிதை வாசிப்பு உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எமது பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த நிகழ்வுகள் அமையப்பட்டிருந்தன.
கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பகிர்ந்து கொள்ளவும், எதிர்காலத்திற்கான புதிய வாய்ப்புகளை ஆராயவும் இந்த சந்திப்பு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. நிகழ்வின் முக்கிய நோக்கம், உள்ளூர் கலைஞர்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்கி, அவர்களின் திறமைகளை உலகமெங்கும் வெளிப்படுத்த வழிவகை செய்வதென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
நிகழ்வு நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணியளவில் நிறைவு பெற்றது. கலாச்சாரத்தையும் கலை வடிவங்களையும் மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




