மூதூர், கிளிவெட்டி, குமாரபுரம் படுகொலையின் 29வது ஆண்டு நினைவு தினம் இன்று (11) செவ்வாய்க்கிழமை குமாரபுரத்தில் மிகவும் உணர்வுபூர்வமான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது.
குமாரபுரம் கிராம மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின் போது, படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களுக்கு விளக்கேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தி இறந்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பிராத்தனை இடம்பெற்றத்துடன் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் மகஜர் ஒன்றும் படுகொலை செய்யப்பட்ட உறவினர்களால் வழங்கி வைக்கப்பட்டது. தற்போதைய ஜனாதிபதிக்கும் நீதி கோரி மகஜர் கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
1996ம் ஆண்டு 02ம் மாதம் 11ம் திகதி மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் வெட்டு சம்பவத்தின் காரணமாக பெண்கள், சிறுவர்கள் உட்பட அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் 15 வயதான சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதோடு, மேலும் 30 பேர் காயமடைந்தனர்.
இந்த கொடூரமான படுகொலை சம்பவத்திற்கு, 29 ஆண்டுகள் கடந்தும், இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதமான நீதியும் வழங்கப்படாமல் தாமதமாக உள்ளது. இந்நிலையில், தமது உறவுகளுக்கு நீதி கிடைக்காத அடிப்படையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் பொதுமக்களும் இன்று 29வது நினைவேந்தல் நிகழ்வை நடத்தி, அங்கு நிகழ்ந்த கொலைகள் பற்றிய நினைவுகளை நினைவுகூருந்தனர்.
இக் கொலைச் சம்பவம் தொடர்பாக 96 இராணுவச் சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு மூதூர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதவான் மு.கோ.செல்வராசா அவர்களின் முன்னிலையில் தொடர்ச்சியாக 3 நாட்கள் அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது. இதன்போது 7 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு ஆரம்பகட்ட விசாரணை மூதூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன்போது போதிய சாட்சியங்கள் இருப்பதன் காரணமாக குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை 154வது பிரிவின்கீழ் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு தீர்ப்புக்காக குறித்த வழக்கு பாரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் பாதுகாப்பு நிமிர்த்தம் குறித்த வழக்கானது அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை ஜுரிகள் சபை முன்னிலையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2016ம் ஆண்டு யூலை மாதம் 27ம் திகதி எஞ்சியிருந்த 6 முன்னாள் இராணுவ வீரர்களும் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதுடன், அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர்.
இவ்வாறு நீதி கிடைக்காத நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அரசின் ஆதரவின்மை மற்றும் நீதியின்மையை எதிர்த்து, தொடர்ந்து நீதி கேட்டு போராடி வருகின்றனர்.


29வது ஆண்டு நினைவேந்தலின் மூலம், அவர்கள் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு நீதி மற்றும் துன்புற்ற குடும்பங்களுக்கு ஆதரவோடு மரியாதையும் பெற வேண்டும் எனக் கோருகின்றனர்.
இந்த கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்கள்; சுப்பையா சேதுராசா, அழகுதுரை பரமேஸ்வரி, அருமைத்துரை வள்ளிப்பிள்ளை, கிட்ணன் கோவிந்தன், அருணாசலம் தங்கவேல், செல்லத்துரை பாக்கியராசா, வடிவேல் நடராசா, ராஜேந்திரம் கருணாகரம், சண்முகநாதன் நிதாந்தன், இராமஜெயம் கமலேஸ்வரன், கந்தப்போடி கமலாதேவி, சிவக்கொழுந்து சின்னத்துரை, சிவபாக்கியம் நிசாந்தன், பாக்கியராசா வசந்தினி, அமிர்தலிங்கம் ரஜனிகாந்தி, தங்கவேல் கலாதேவி, ஸ்ரீபன் பத்துமா, சுந்தரலிங்கம் பிரபாகரன், சுந்தரலிங்கம் சுபாஜினி, கனகராசா சுவாதிராசா, சுப்பிரமணியம் பாக்கியம், விநாயகமூர்த்தி சுதாகரன், ஆனந்தன் அன்னம்மா, விஜயகான் லெட்சுமி, அருமைத்துரை தனலெட்சுமி ஆகியோர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நினைவு தினம், அரசியல், சமூக மற்றும் சட்ட ரீதியான புதிய முயற்சிகளுக்கு வழிகாட்டும் ஒரு முக்கிய நிகழ்வாகும், எனவே இன்றைய நாளில் இந்த படுகொலையின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




