கைதடி, மூத்தியாவத்தை பகுதியில் பிறந்த சிசுவை கிணற்றில் வீசிக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிசுவை பிரசவித்த பெண், சகோதரி ஆகியோரே சாவகச்சேரி பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களது தாயாரும் பொலிசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதும், அவர் சம்பவ நேரத்தில் வீட்டில் இருக்கவில்லையென தெரிவித்ததால், அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மூத்தியாவத்தை கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையிலுள்ள தோட்டக்கிணற்றில் இருந்து இன்று காலையில் சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. பிரசவித்த சிசு, தொப்புள் கொடியும் அகற்றப்படாமல் கிணற்றில் சடலமாக காணப்பட்டது.
சிசுவை பிரசவித்திருக்கலாமென்ற சந்தேகத்தில், அயலில் உள்ள பெண்ணொருவரின் வீட்டுக்கு பொலிசார் சென்ற போது, அந்த வீட்டில் அவர் இருக்கவில்லை. வீட்டு வளவில் கிடங்கு வெட்டப்பட்டிருந்தது.
அந்த பெண்ணிண் தாயார், சகோதரி, தலைமறைவான பெண்ணின் 2 பிள்ளைகள் வீட்டில் இருந்தனர்.
நேற்று இரவு அந்தப் பெண் வீட்டில் சிசுவை பிரசவித்ததாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்த பெண்ணை தேடினர்.
அந்த பெண் வவுனியா செல்லும் பேருந்தில் ஏறுவதை கண்ட சிலர், பொலிசாருக்கு தகவல் வழங்கினர். இதனடிப்படையில், அந்த பேருந்து வழிமறிக்கப்பட்டு, பொலிசாரால் அந்த பெண் கைது செய்யப்பட்டார்.
கைதானவர் 42 வயதானவர். அவர் திருமணம் செய்து 2 பிள்ளைகள் உள்ளனர். 4 வருடங்களின் முன்னர் கணவரால் கைவிடப்பட்டவர். பின்னர், கள்ளக்காதல் உறவின் மூலம் கர்ப்பமாகி, சிசுவை பிரசவித்துள்ளார்.
கிளிநொச்சியில் வசித்து வந்த அந்த பெண், அண்மைக்காலமாக கைதடியில் தாயாரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். கிளிநொச்சிக்கு தப்பிச் செல்லும் போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
சிசுக்கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அந்தப் பெண்ணின் 33 வயதான சகோதரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்கள் நாளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.