போக்குவரத்து பொலிசாருக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (20) இரவு அனுராதபுரம், ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமைகளை மேற்கொண்டு வந்த இரண்டு பொலிசாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததே இதற்குக் காரணம்.
மேலும், சந்தேக நபரைக் கைது செய்து, விசாரணைகளை மேற்கொண்டு, அந்த விசாரணைகளின் முன்னேற்றத்தை பெப்ரவரி 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனனுக்கு எதிராக பொலிசார் விசாரணையைத் தொடங்கினர், மேலும் இந்த சம்பவம் தொடர்பான ஆதாரங்களை அனுராதபுரம் பொலிசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர்.
அதன்படி, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
அர்ச்சுனாவும், அவருடன் சேர்ந்திருக்கும் பெண் கௌசல்யாவும் காரில் கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, பிரமுகர்கள் பயன்படுத்தும் ஒலி, ஒளி சமிக்ஞையை எழுப்பியபடி சென்றிருந்தார். பொலிசார் தலையிட்டபோது, வழக்கம் போல, ஓஎல் படிக்காத மோடையா என அர்ச்சுனா உளறிக்கொட்டிய வீடியோ வைரலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.