24.6 C
Jaffna
January 26, 2025
Pagetamil
இந்தியா

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை: தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றம் செய்வோருக்கு அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா மற்றும் மத்திய அரசு கடந்த 2023-ம் ஆண்டு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா (பிஎன்எஸ்எஸ்) ஆகிய சட்டங்களை தமிழகத்துக்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்வதற்கான சட்டமசோதா ஆகிய 2 சட்ட மசோதாக்களை தமிழக சட்டபேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். நேற்று இந்த மசோதாக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பின்னர் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக இந்த சட்டமசோதாக்களை வரவேற்று உறுப்பினர்கள் பாலாஜி (விசிக), வேல்முருகன் (தவாக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), ஜி.கே.மணி (பாமக), செல்வபெருந்தகை (காங்கிரஸ்) ஆகியோர் பேசினர். அப்போது அவர்கள் கூறும்போது, “இந்த சட்டங்களை யாரும் தவறாக பயன்படுத்தாமல் இருக்க வகை செய்ய வேண்டும். இச்சட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாலியல் குற்றவாளிகளை விரைவாக தண்டிக்க உரிய ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்” என வலியுறுத்தினர். சட்டத் துறை அமைச்சர் ரகுபதி இந்த சட்ட மசோதாக்களை வரவேற்றுப் பேசினார்.

12 வயதுக்குட்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்தால் கடுங்காவல் தண்டனை அல்லது மரண தண்டனை, 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை கூட்டு பாலியன் வன்கொடுமை செய்தால் கடுங்காவல் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை, மீண்டும், மீண்டும் குற்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை அல்லது கடுங்காவல் ஆயுள் தண்டனை விதிக்க மேற்கண்ட சட்டமசோதாக்களில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆசிட் வீசி கொடுங்காயம் ஏற்படுத்தினால் அபராதத்துடன் கடுங்காவல் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை, ஆசிட் வீசுவதாக மிரட்டினால் அபராதத்துடன்10 ஆண்டுகள் முதல் ஆயுட்கால சிறை தண்டை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விவரங்கள்: டிஜிட்டல் முறை, மின்னணு ரீதியான குற்றங்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் என உள்ளது. இதை, முதல் தண்டனை தீர்ப்பின்பேரில் 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் என நீட்டிக்கப்படும். இரண்டாவது அல்லது தொடர்ச்சியான தண்டனை தீர்ப்பின்போது 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

வன்கொடுமையால் ஏற்படும் மரணங்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதமும், மரணம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்படும் வன்கொடுமைகளுக்கு ஆயுள் தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் என உள்ளது. தற்போது அது முறையே 15 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் என விதிக்கப்படும்.

கல்வி நிலையங்கள், விடுதி, திரையரங்கு, வணிக வளாகங்கள் போன்ற பொது இடங்களில் போதிய மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். குற்ற சம்பவங்கள் நடந்த 24 மணி நேரத்தில் காவல் நிலையங்களுக்கு தகவல் அளிக்க வேண்டும். புகார் அளிக்காமல் மறைத்தால் விதிக்கப்படும் ரூ.2 ஆயிரம் அபராதம் என்பது ரூ.50 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

அதேபோல, வன்கொடுமைக்கு 14 ஆண்டு கடுங்காவல் முதல் அபராதத்துடன் ஆயுட்கால சிறை தண்டனை. காவல் துறை அலுவலர், சிறைச்சாலை அலுவலர், அரசு அலுவலர், மருத்துவமனை பணியாளர் வன்கொடுமை குற்றவாளியாக இருந்தால் 20 ஆண்டு கடுங்காவல் முதல் ஆயுட்கால சிறை தண்டனை. 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்தால் கடுங்காவல் தண்டனை அல்லது மரண தண்டனை. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் அபராதத்துடன் கடுங்காவல் ஆயுள் தண்டனை. 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் கடுங்காவல் ஆயுள் அல்லது மரண தண்டனை. மீண்டும் மீண்டும் குற்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது கடுங்காவல் ஆயுள் தண்டனை. பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் அபராதத்துடன் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை.

பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல் அல்லது பலத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினால் அபராதத்துடன் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை. பெண்ணை பின்தொடர்ந்தால் அபராதத்துடன் 5 ஆண்டு வரை சிறை தண்டனை. இதே குற்றம் தொடர்ந்தால், அபராதத்துடன் 7 ஆண்டு வரை சிறை தண்டனை. ஆசிட் வீசி கொடுங்காயம் ஏற்படுத்தினால் அபராதத்துடன் கடுங்காவல் ஆயுள் அல்லது மரண தண்டனை. ஆசிட் வீசுவதாக மிரட்டினால் அபராதத்துடன் 10 ஆண்டு முதல் ஆயுட்கால சிறை தண்டனை வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இன்று விவாதத்துக்கு பிறகு, 2 சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்படுகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பெயரில் பலகோடி மோசடி

east tamil

மஹா கும்பமேளாவில் மீண்டும் தீ

east tamil

துறவறத்துக்கு மாறிய நடிகை

Pagetamil

கட்சி தொடங்கியதுமே சிலர் ஆட்சிக்கு வர துடிக்கின்றனர்: விஜய் பற்றி முதல்வர் ஸ்டாலின் மறைமுக விமர்சனம்

Pagetamil

மகாராஷ்டிராவில் ரயில் விபத்து: 12 பேர் உயிரிழப்பு, 40 பேர் காயம்

east tamil

Leave a Comment