தமிழரசுக் கட்சி பதில் பொது செயலாளர் சத்தியலில்கம் வெறும் டம்மி பதவி
ஊழல் மோசடி செய்து மாகாண சபையில் அமைச்சராக இருந்து இடைநிறுத்தப்பட்டவரே வன்னி வேட்பாளர் என சிவமோகன் குற்றச்சாட்டு
கட்சியின் செயலாளர் பதவி என்பது பொறுப்புமிக்கது. இன்று டம்மியான புல்லுருவிகளால் அந்த பதவி நாசமாக்கப்பட்டுள்ளது. பதில் செயலாளர் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு பதவி விலகவேண்டும். அத்துடன், மாகாணசபையில் ஊழல் மோசடி செய்ததால் அமைச்சரில் இருந்து இடைநிறுத்தப்பட்டவரே வேட்பாளர் எனவும் தமிழரசுக் கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலை தொடர்பாக வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இம்முறை தேர்தலில் தமிழரசுக்கட்சி வன்னியிலும் யாழிலும் ஆறு ஆசனங்களை வெல்லக்கூடிய சூழல் இருந்தது. ஆனால் இன்று சுயநலவாதிகளின் டம்மி விளையாட்டால் ஒரு ஆசனம் பெறுவதே பெரும் போராட்டமாக மாறியுள்ளது. எமது கட்சியின் தேர்தல் நியமனக் குழுவானது கடந்த 2018இல் தேர்வுசெய்யப்பட்டது. அதில் சட்டத்தரணி தவராசா, சாள்ஸ் நிர்மலநாதன், ஈ.சரவணபவன், நான் உட்பட நான்கு பேர் அந்த குழுவில் இருந்தோம். இந்தநிலையில் திடீர் என நிகழ்ச்சி நிரல் இல்லாமல் எமது நான்கு பேரின் பெயர்களையும் வெட்டிவிட்டு புதிதாக சாணக்கியன், சேயோன், ரஞ்சினி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதனாலேயே இந்த மோசமான நிலை கட்சிக்கு ஏற்பட்டது.
தான் மட்டும் வன்னியில் வெல்லவேண்டும் என்ற டம்மி விளையாட்டே இது. எனவே பதில் பொதுச்செயலாளருக்கு நான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளேன். இவர்களை இப்படியே விட்டால் கட்சிக்கு இன்னும் பல கேடுகளை செய்வார்கள். இவர்கள் உடனடியாக அகற்றப்படவேண்டும். தோல்வியடைந்தவர்களை வேட்பாளராக போடுவதில்லை என்று கட்சி ஒரு போதும் முடிவெடுக்கவில்லை. அப்படி ஒரு தீர்மானம் பொதுக்குழுவிலும், மத்தியகுழுவிலும் இல்லை. கட்சியை வெட்டிவிட்டு ஒரு சிலர் வெல்லலாம் என்பது மிகவும் மோசமான செயல். எப்படி இந்த சதிவேலையினை திட்டமிட்டுள்ளார்கள் என்று பாருங்கள்.
தலைவராக இருந்தும் நியாயமான முறையில் வேட்பாளர் நியமனங்களை செய்ய முடியவில்லை என்பதாலும், நியமனக்குழுவில் இருந்த ஏனையவர்களை இணைக்க முடியாமல் போனதாலும் மாவை சேனாதிராஜா பதவி விலகினார். நீ இங்கு வென்றால் மட்டும் காணும் நானும் யாழ்பாணத்தில் வென்றால் காணும் என்று சத்தியலிங்கமும், சுமந்திரனும் கருதுகிறார்கள். தமிழரசுக்கட்சி அதுவல்ல. இவர்களால் இன்று ஒரு அணியே பிரிந்து சென்றுள்ளது. ஒருவரை தவிர இவர்கள் போட்ட அனைத்து வேட்பாளர்களுமே டம்மிகள் இவர்களால் எப்படி வெல்லமுடியும்.
இன்று வன்னியில் புதிதாக போடப்பட்ட வேட்பாளரான ரவீந்திரகுமார் மாவட்டக் குழுவில் விண்ணப்பம் தராதவர். அவுஸ்ரேலியாவில் நிரந்தர வதிவுரிமை கொண்டவர்.
வேட்பாளராக என்னை தெரிவு செய்யுமாறு நான் ஒரு போதும் கோரவில்லை. எனக்கு பதிலாக புதுக்குடியிருப்பு பிரதேசகிளையின் செயலாளரான விமலதாசையே நான் பரிந்துரை செய்தேன்.
கட்சியால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறி இவர்கள் செயற்ப்பட்ட விதமானது தமிழரசுக் கட்சியினை இன்று கீழ்நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. பொதுச்செயலாளர் பதவி என்பது விட்டுக்கொடுப்புடன் அனைவரையும் அரவணைத்து ஒன்றாக இணைத்துச் செல்லும் ஒரு பதவி. தமிழரசுக்கட்சியின் தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்றோர் இந்தப்பதவியினூடாக தங்களுக்குள்ளேயே விட்டுக் கொடுத்து செயற்ப்பட்டிருந்தனர் .ஆனால் அந்த பதவி இன்று டம்மியான புல்லுருவிகளால் நாசமாக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட வரமாட்டேன் என்று சொல்பவர்களை வாருங்கள் தேசியப்பட்டியல் தருகிறோம் என்று அழைக்கிறார்கள். இதுவா தேர்தல் நியமனக்குழுவின் வேலை. உங்களுக்குள்ளேயே பிரித்துக் கொள்ளவா இந்தக்குழுவை போட்டோம். தேர்தலில் போட்டியிட இருந்தவர்கள் நியமனக்குழுவில் இருந்து விலத்தியிருக்க வேண்டும் என்று கேட்டோம். அது நடக்கவில்லை. ஆனால் தேசியப்பட்டியல் ஆசனம் எக்காரணம் கொண்டும் தோற்றவர்களுக்கு கொடுக்க கூடாது. தோற்றவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாவிட்டால் அதனைமட்டும் எப்படி கொடுக்கமுடியும். யாழ்பாணத்தில் தான் தோற்றால் தனக்கு ஒரு தேசியபட்டியலாம் என்று அங்கு ஒருவர். இங்கால ஒருவர் அது தனக்காம் என்கிறார். கட்சி என்ன றோட்டில் விக்கிற அப்பமா. நீங்கள் பிய்த்துக் கொண்டு போறதுக்கு. பாதிக்கப்பட்ட மாவட்டத்திற்கே தேசியபட்டியல் ஆசனம் வழங்கப்படவேண்டும்.
ஊழல்வாதிகளை அகற்றுவேன் என்றே அனுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்தார். தமிழரசுக் கட்சி தெரிவு செய்தவர்கள் ஊழல் மோசடிக்காரர்கள். மாகாண சபையில் ஊழல் என்று சொல்லி நிரூபிக்கப்பட்டு முதலமைச்சரால் இடைநிறுத்தப்பட்டவர். பின்னர் நீதிமன்றிற்கு சென்று தாங்கள் நியாயவாதிகள் என்று இன்று வரை நியாயப்படுத்த முடியாதவர். இவர்கள் தான் ஊழல்வாதிகள். அவர் வன்னியில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடுகிறார். முல்லை மாவட்டத்தில் போடப்பட்ட மூவரும் ஏதோ ஒரு விதத்தில் அப்படியானவர்கள். ஒருவர் தேர்தல் கேட்பதற்கே பொருத்தமில்லாதவர். இரட்டை பிரஜா உரிமை கொண்டவர். பாராளுமன்றுக்கு செல்ல முடியுமா. அடுத்தவர் புலிகள் காலத்தில் ஊழல் மோசடிக்காக அடைத்து வைக்கப்பட்டவர். இன்னொருவர் பகிரங்கமாகவே ஊழல் மோசடியில் சிக்கியவர். இன்று அவர்கள் எல்லாம் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள். நல்லதே நடக்கட்டும். நிச்சயமாக நான் குற்றப்பத்திரிகையினை தனித்தனியாக தாக்கல் செய்வேன்.
இன்று கட்சியானது சரியான தீர்மானம் எடுக்க முடியாமல் வழக்கில் சிக்கியுள்ளது. எதனால் அது? கட்சியின் மாநாடு நடப்பதற்கு முன்னர் அல்லது பொதுக்குழு கூடுவதற்கு முன்னர் ஆலோசனைக்கூட்டம் ஒன்று நடாத்தப்படவேண்டும். அந்த கூட்டத்தில் தான் பிரச்சனைகள் இல்லாமல் பொதுக்குழுவை எப்படி வழிநடத்துவது என்று தீர்மானிப்பது. பதவிகளில் யாரை போடலாம் என்பது தொடர்பாக ஆலோசனை செய்வதும் அந்த கூட்டதிலேயே. அதுவே ஆலோசனைக் குழுவின் பணி. அந்தக்கூட்டம் வாக்கெடுப்பிற்கு முதள்நாள் திருகோணமையில் நடப்பதாக இருந்தது. நாங்க அதற்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கும் போது தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அந்தக்கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சத்தியலிங்கம் ஐயா நிமோனியாவாலோ கொரோனாவாலோ படுத்துக்கிடக்கிறார் என்றார்கள். அதனால் கூட்டம் ரத்தாகியது. அந்த பதில்செயலாளர் உண்மையில் சுகவீனமுற்றுத்தான் கூட்டத்திற்கு வரவில்லை என்றால் அவர் எந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரின் விபரங்களை தரவேண்டும். ஊடகங்களுக்குப் பொறுப்பு உள்ளது நீங்கள் போய் அவரிடம் கேட்டுபாருங்கள். மக்களுக்கு அதனை வெளிப்படுத்த வேண்டும். அப்படி இல்லாது விடில் இது நடத்தப்பட்ட சூழ்ச்சி. அந்த சூழ்ச்சியினாலேயே அந்த தெரிவுகள் போட்டிக்கு சென்றது. பின்னர் நிர்மூலமாக்கப்பட்டது.
எனவே பதில்செயலாளர் சகல பொறுப்புக்களையும் ஏற்று கட்சியினை உருக்குலைத்ததையும் ஏற்றுக்கொண்டு ராஜினாமா செய்யவேண்டும். அடுத்தது ஊடகப்பேச்சாளராக ஒருவர் இருப்பதாக இருந்தால் கட்சி எழுதிக்கொடுப்பதை மாத்திரமே சொல்லவேணும். தனிப்பட்ட கருத்தை அவர் சொல்லமுடியாது. ஊடக பேச்சாளர் அந்த தர்மத்தை மீறியபடியால் அவரும் நீக்கப்படவேண்டும். நாம் பயந்தவர்கள் அல்ல. கடசிவரை தமிழரசுக்கட்சிக்கு உள்ளே இருந்து குரல் கொடுப்போம். உயிர் இருக்கும்வரை தமிழரசுக்கட்சியோடு தான் பயணிப்பேன் என்றார்.