இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் இன்று ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த சம்பவம் குறித்து பி.எஸ்.எஃப் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த பிப்ரவரி 25’ஆம் தேதி எல்லையில் அமைதியை கடைபிடிக்கும் 2003 அமைதி ஒப்பந்தத்தை முழுமையாக கடைபிடிப்பதாக முடிவெடுத்தன. முன்னதாக, பிப்ரவரி 22 ஆம் தேதி நிறுவப்பட்ட ஹாட்லைன் தொடர்பு மூலம் இராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல்கள் (டிஜிஎஸ்எம்ஓ) இடையே விவாதிக்கப்பட்ட பின்னர். பிப்ரவரி 24/25 நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்தது.
இரு நாடுகளும் ஒப்பந்தத்தை கடைபிடிப்பதாக உறுதியளித்த பின்னர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் நடத்திய முதல் யுத்த நிறுத்த மீறல் இது என்று பிஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
“ராம்கர் செக்டரில் காலை 6.15 மணிக்கு பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் திடீரென யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டனர்.” என்று பிஎஸ்எஃப் இன்ஸ்பெக்டர் ஜெனரல் என்.எஸ்.ஜாம்வால் தெரிவித்தார். எனினும் துப்பாக்கிச் சூட்டில் எந்த சேதமும் ஏற்படவில்லை.
பாகிஸ்தானிய வீரர்கள் எல்லையில் உள்ள வேலிக்கு அருகில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பி.எஸ்.எஃப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பிப்ரவரி ஒப்பந்தத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் பிற செக்டர்களில் போர்நிறுத்தம் தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களையும் கண்டிப்பாக கடைபிடிக்க இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டன.
முன்னதாக 2003’ஆம் ஆண்டிலும் போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் பாகிஸ்தானின் அடாவடியால் இந்த ஒப்பந்தம் வெறுமனே காகிதத்தில் மட்டுமே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு பிப்ரவரியில் செய்யப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை அறிவிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது மற்றும் எல்லை பதட்டங்களைக் குறைப்பதற்கான ஒரு வழியாக இது பார்க்கப்பட்டது.
எனினும் மூன்று மாதங்கள் கூட முடியாத நிலையில், பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் வாலாட்டி, தனது கோர முகத்தை மீண்டும் காட்டியுள்ளது.