யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 492,280 வாக்காளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 100,907 வாக்காளர்களுமாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 593,187 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
யாழில் 511 வாக்கெடுப்பு நிலையங்களும் கிளிநொச்சியில் 108 வாக்கெடுப்பு நிலையங்களும் என 619 வாக்கெடுப்பு நிலையங்கள் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வாக்களிப்பு நிலையத்தில் செப்டம்பர் 21ம் திகதி காலை 07 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பிக்கப்படும். பிற்பகல் 04 மணிக்கு வாக்களிப்பு நிலைய வரிசையில் தரித்து நிற்கின்ற வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை பிற்பகல் 04 மணிக்கு பின்னர் வாக்களிப்பு நிலையத்தினுள் உட்பிரவேசிக்க இடமளிக்க முடியாது.
தெல்லிப்பழையினைச் சொந்த இடமாகக் கொண்டு பருத்தித்துறையில் தற்காலிகமாக வசித்து வருகின்றவர்களை வியாபாரிமூலையிலிருந்து தெல்லிப்பழையில் வாக்களிப்பதற்கு போக்குவரத்து பேருந்துக்கள் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் கடமைக்காக 8232 உத்தியோகத்தர்கள் மற்றும் 2100 பொலிஸாரும் கடமையில் ஈடுபடவுள்ளனர்.
இலங்கை போக்குவரத்துச் சபை மூலம் 42 பேரூந்துகளும், தனியார் போக்குவரத்துச் சங்கம் மூலம் 132 பேருந்துகளும் தேர்தல் கடமைகளுக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. நெடுந்தீவில் வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர் வாக்குப் பெட்டிகள் உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு கொண்டுவரப்படும்.
சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு வாக்குப் பெட்டி, வாக்குச் சீட்டு இதர ஆவணங்கள் விநியோகித்தல் நடவடிக்கைகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நாளை (20) காலை 07 மணிக்கு ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதலாவது பேரூந்து காலை 08.30 மணியளவில் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் பெறுபேற்றினை தயாரித்து வெளியிடும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள 511 வாக்களிப்பு நிலையங்களினதும் வாக்குகளை எண்ணுவதற்காக, 41 வாக்கெண்ணும் நிலையங்களும், அஞ்சல் வாக்குகளை எண்ணுவதற்காக 14 வாக்கெண்ணும் நிலையங்களுமாக மத்திய கல்லூரியில் 55 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது – என்றார்.