26 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இந்தியா

மனிதத் தவறால் ஏற்பட்ட ராஜ்கோட் தீவிபத்து

குஜராத்தின் ராஜ்கோட் நகரில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ‘டிஆர்பி கேம்’ என்ற பெயரில் சிறார், பெரியவர்களுக்கான விளையாட்டு மையம் செயல்பட்டது. அங்கு நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர். இதில் 12 பேர் சிறுவர், சிறுமியர் ஆவர்.

ராஜ்கோட் தீ விபத்தில் 30 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் அங்குள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெறுகின்றனர். அவர்களை, முதல்வர் பூபேந்திர படேல் நேற்றுநேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000மும் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ராஜ்கோட் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்து தொடர்பாக குஜராத் உயர் நீதிமன்றம் தாமாக விசாரிக்க முன்வந்துள்ளது. தலைமை நீதிபதி பிரேன் வைஷ்ணவ், நீதிபதி தேவன் தேசாய் அமர்வு முன்பு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது:

மனித தவறால் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. அகமதாபாத், வடோதரா, ராஜ்கோட், சூரத் ஆகிய பெருநகரங்களில் செயல்படும் விளையாட்டு மையங்கள் குறித்த விரிவான அறிக்கையை மாநில அரசு 24 மணி நேரத்தில்தாக்கல் செய்ய வேண்டும்.

அந்த அறிக்கையில் விளையாட்டு மையங்களின் பாதுகாப்பு குறித்து தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். விளையாட்டு மையங்களில் ஆய்வு நடத்தப்பட்டதா, எந்தஅடிப்படையில் உரிமம் வழங்கப்பட்டது என்பன உள்ளிட்ட தகவல்கள், ஆவணங்களை இணைக்க வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

பெட்ரோல், டீசலால் விபரீதம்: ராஜ்கோட் போலீஸார் கூறியதாவது: டிஆர்பி கேம் மையம் 3 மாடிகளை கொண்டதாகும். இது கான்கிரீட், செங்கற்களால் கட்டப்படவில்லை. மரம், இரும்பு, பைபரால் 3 மாடி அரங்குகள் உருவாக்கப்பட்டு உள்ளன. ஜெனரேட்டர்களை இயக்க சுமார் 3,500 லிட்டர் டீசல், பெட்ரோலும் பேரல்களில் சேமித்து வைத்துள்ளனர்.

சம்பவத்தன்று விளையாட்டு மையத்தில் வெல்டிங் பணி நடைபெற்றிருக்கிறது. வெல்டிங் ஊழியர்களின் கவனக்குறைவால் தீ விபத்து நேரிட்டு உள்ளது. மரத்தினாலான கட்டுமானம், டீசல், பெட்ரோலால் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. டிஆர்பி கேம் உரிமையாளர் யுவராஜ் சிங் உட்பட 8 பேரை கைது செய்துள்ளோம்.

தீயில் கருகி உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை. எனவே மரபணு பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும். இவ்வாறு ராஜ்கோட் போலீஸார் தெரிவித்தனர்.

5 உறவினர்கள்: தீ விபத்தில் 5 உறவினர்களை பறிகொடுத்த தேவிகபா ஜடேஜா கூறியதாவது: டிஆர்பி கேம் மையத்தின் நுழைவு கட்டணம் ரூ.500. கோடைவிடுமுறை காரணமாக நுழைவுகட்டணம் ரூ.99 ஆக குறைக்கப்பட்டது. இதனால் ஏராளமானோர் விளையாட்டு மையத்தில் குவிந்திருந்தனர். எங்கள் குடும்பத்தை சேர்ந்த 10 பேர் மையத்துக்கு சென்றோம். இதில் 5 பேர் உயிரிழந்துவிட்டனர்.

விளையாட்டு மையத்தின் 3 மாடிகளுக்கும் ஒரு படிக்கட்டு மட்டுமே இருந்தது. தீயணைப்பு சாதனங்கள் போதுமானதாக இல்லை. தீயணைப்பு வீரர்களும் விரைவாக வந்து சேரவில்லை. இதுவே அதிக உயிரிழப்பு ஏற்படக் காரணம். இவ்வாறு தேவிகபா ஜடேஜா தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

நல்லி குப்புசாமி, அஜித், ஷோபனாவுக்கு பத்ம பூஷண்; அஸ்வின், வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு

Pagetamil

வேங்கைவயல் சம்பவம் தனிப்பட்ட விரோதம்: தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் – தமிழக அரசு வேண்டுகோள்

Pagetamil

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பெயரில் பலகோடி மோசடி

east tamil

மஹா கும்பமேளாவில் மீண்டும் தீ

east tamil

Leave a Comment