முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவு

Date:

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 98.

வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஆர்.எம்.வீரப்பன், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பகல் அவர் காலமானார்.

தமிழகத்தில் மூத்த திராவிட அரசியல் தலைவர்களில் ஆர்.எம்.வீரப்பன் முக்கியமானவர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில், அவரது அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தவர். அதேபோல், மறைந்த முதல்வர்களான ஜானகி மற்றும் ஜெயலலிதா ஆகியோரது அமைச்சரவைகளிலும் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன்.

அதிமுகவில் இருந்தாலும், திமுக தலைவரான கருணாநிதி மற்றும் திமுகவைச் சேர்ந்த தலைவர்கள் உடனும் நட்பில் இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அதிமுகவில் இருந்து விலகிய பிறகு எம்ஜிஆர் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியவர் ஆர்.எம்.வீரப்பன். திரைத் துறையில் எம்ஜிஆருக்கு வலதுகரமாக இருந்த ஆர்.எம்.வீரப்பன், சத்யா மூவிஸ் நிறுனத்தை தொடங்கி பல திரைப்படங்களை தயாரித்தவர் ஆர்.எம்.வீரப்பன். உடல்நலக்குறைவு காரணமாக மறைந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி: “திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனருமான ஆர்.எம். வீரப்பன் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். அவரது 98-வது பிறந்த நாளான கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி நேரில் அவரது இல்லத்துக்கே சென்று அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த நினைவுகள் நிழலாடுகின்றன. அரசியலில் மட்டுமின்றி, திரைத்துறையிலும் வரலாற்று முத்திரையைப் பதித்துள்ள ஆர்.எம்.வீரப்பன், நூறாண்டுகளும் கடந்து நிறைவாழ்வு வாழ்வார் என்ற எம் போன்ற அவரது நலம் விரும்பிகளின் எதிர்பார்ப்பு, எதிர்பாராத விதமாக நிறைவேறாமல் போயிருப்பது வருத்தமளிக்கிறது.

ஆர்.எம்.வீ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ஆர்.எம்.வீரப்பன், பெரியார், அண்ணா, எம்ஜிஆர், மறைந்த முதல்வர் கருணாநிதி என அனைத்து தலைவர்களுடனும் நெருக்கமும், நட்பும் கொண்டிருந்தவர். எம்ஜிஆரின் மனச்சாட்சியாகவும், நிழலாகவும் கருதப்பட்ட ஆளுமையாக அரசியலில் வலம் வந்தவர். அவரது அமைச்சரவையில் இடம்பெற்று செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகவும் பணியாற்றிப் புகழ் பெற்றவர்.

பின்னாளில், எம்ஜிஆர் கழகம் என்று தமக்கென தனி இயக்கம் கண்டாலும், திமுகவுடனும், மறைந்த முதல்வர் கருணாநிதியுடனும் அரசியல் ரீதியாக மட்டுமின்றி, தனிப்பட்ட முறையிலும் நல்லுறவையும், நட்பையும் பேணி வந்தார். அதே அன்பையும், பரிவையும் என்னிடத்திலும் அவர் காட்டி வந்தார்.

எம்ஜிஆரின் சத்யா மூவீஸ் நிறுவனத்தைத் திறம்பட நிர்வகித்து தமிழ்த்திரையுலகுக்கு பல்வேறு வெற்றிப் படங்களைத் தந்த சிறந்த தயாரிப்பாளராகவும் அவர் திகழ்ந்தார். அத்துடன், அவரது தமிழ்ப் பற்று காரணமாக சென்னை கம்பன் கழகத்துக்கும் தலைவராகப் பொறுப்பேற்று, இலக்கியத்துறையிலும் தனது தடத்தைப் பதித்தார்.

அத்துடன், ஆழ்வார்கள் ஆய்வுமையம் என்ற அமைப்பின் தலைவராகப் பணியாற்றி, ஆன்மிகத்துறையிலும் ஈடுபாடு கொண்டவராக அவர் இருந்து வந்தார். அரசியல், திரைத்துறை, தமிழ்த்துறை, ஆன்மிகம் என்று அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்த ஆர்.எம்.வீரப்பன் , அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினராலும் விரும்பப்படும் பேராளுமையாகத் திகழ்ந்தார்.

அவரது மறைவு, அரசியல் உலகுக்கு மட்டுமின்றி, அவர் இயங்கி வந்த திரையுலம், இலக்கியம், ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்துறைகளுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது துணைவியார், குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட இயக்கம் இருக்கும் வரை ஆர்.எம்.வீரப்பனின் புகழும் நிலைத்திருக்கும்!” என்று இரங்கல் செய்தியில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பண்டிகைக்காலத்தில் கோழி இறைச்சி விலை அதிகரிக்காது!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை பாரியளவில் அதிகரிக்காது என...

மீண்டும் பொருளாதார நெருக்கடியா? திட்டமிட்ட சதி குறித்து ஜனாதிபதி எச்சரிக்கை!

2028ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச துறை ஊழியர்களின்...

இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்