அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணிவதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பில் முதலிடம் வகிக்கும் நாடு அமெரிக்கா. கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி போடும் பணியும் அந்நாட்டில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் பலனாக அந்நாட்டில் சமீப காலமாக நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகிறது.
கொரோனா பரவல் உச்சத்திலிருந்த சமயத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மாஸ்க் அணிவதில் அமெரிக்காவில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இனி பொது இடங்களில் மாஸ்க் கட்டாயமாக அணிய வேண்டியதில்லை என அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கூட்டமான இடங்களில் செல்ல நேர்ந்தால் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தியேட்டர்கள் போன்ற உள் அரங்கு கூடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேர்ந்தால் கூட்டம் இல்லாவிட்டாலும் மாஸ்க் அணிய பரிந்துரைப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் எடுத்துக்கொண்டு இரண்டு வாரங்கள் ஆன நபர்களுக்கே புதிய மாஸ்க் தளர்வுகள் பொருந்தும் எனவும் அமெரிக்கா நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.