யாழ்ப்பாணத்தை மிரட்டும் டெங்கு: அடுத்தடுத்து நடக்கும் உயிர்ப்பலிகள்!

Date:

யாழ் மாவட்டத்தில் டெங்கு தொற்று மிகப்பெரிய அபாயமாக உருவெடுத்துள்ளது. தற்போது பரவும் டெங்கு தொற்றினால் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், சிலர் ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த சில வருடங்களின் பின்னர் மிகப்பெரியளவில் டெங்கு தொற்று யாழ் மாவட்டத்தை உலுப்பி வருகிறது. நல்லூர், யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலேயே டெங்கு தொற்று மிகப்பெரியளவில் காணப்படுகிறது. மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் கணிசமானளவு டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

டெங்கு பரவலுக்கு பொதுமக்களின் தவறுகள் ஒரு பக்க காரணமென்றால், சுகாதாரத்துறையினரின் பலவீனமும் மறுபக்க காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. சுகாதாரத்துறையினர் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையில் மிகத்தீவிரமாக ஈடுபடுகிறார்களா என்பது கேள்விக்குரியது என சுகாதாரத்துறை மூத்த அதிகாரியொருவர் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பேசும்போது குறிப்பிட்டார்.

பண்டிகைக்கால வார இறுதி விடுமுறைகளின் போது, டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிகக்குறைந்தளவே நடந்ததாகவும், ஒரு அபாயம் ஏற்பட்டுள்ள சமயத்தில், சுகாதாரத்துறையினர் அவ்வளவு “சீரியஸாக“ செயற்பட்டார்களா என்பது கேள்விக்குரியது என்றார்.

வடக்கில் பொதுச்சுகாதார பரிசோதகர்களிற்கு மேலதிக நேர கொடுப்பனவு வெட்டப்பட்டது, இரசாயனம் தெளிப்பதை கட்டுப்படுத்தியது போன்றவையும் தற்போதைய டெங்கு பரவலுக்கு காரணம் என ஒரு ஒரு சுகாதாரத்துறை வட்டாரம் தெரிவித்தது.

எனினும், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் 8 மணித்தியால கடமை நேரத்தில் முழுமையாக செயற்பட்டாலே, டெங்கு கட்டுப்பாட்டை சரியாக செய்யலாம் என்பது இன்னொரு பகுதி சுகாதாரத்துறையினரின் அபிப்பிராயம்.

சுகாதார அமைப்பை சரியாக வழிநடத்தினாலே தற்போதைய நிலைமையை கட்டுப்படுத்தலாம், தவிர்க்கலாம் என்பது சுகாதாரத்துறையில் உள்ளவர்களின் அப்பிராயம். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளராகவும் வைத்தியர் த.சத்தியமூர்த்தி கடமையாற்றுகிறார். இரண்டு பெரிய பொறுப்புக்களை ஒருவரே வகிப்பதும், சுகாதார இயந்திரத்தை விரைவாக நகர்த்த முடியாமலுள்ளதுக்கு காரணமாக இருக்கலாம் என்ற அபிப்பிராயம் சுகாதாரத்துறையினரிடம் உள்ளது.

இதேவேளை, வீதியோரங்களிலும், பொதுஇடங்களிலும் நீர்தேங்கும் கொள்கலன்களை அகற்றுவதில் பிரதேசசபை வினைத்திறனாக செயற்படவில்லையென்ற குற்றச்சாட்டும் சுகாதாரத்துறையிடம் உள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏராளம் மாணவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நூறுக்கும் அதிக மாணவர்கள் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதிலுமிருந்து ஏராளம் மாணவர்கள் வருகிறார்கள். அவர்கள் தமது பிரதேசங்களில் தொற்றுக்குள்ளாகியும் இருக்கலாம். எனினும், மாணவர் விடுதிகளில் விரைவாக டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. பல்கலைக்கழக விடுதி மாத்திரமல்ல, தனியார் விடுதிகளில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

சிறு குழந்தைகளுக்கு இயல்பாக நோயெதிர்ப்பு சக்தி உள்ளதால், டெங்கு தொற்றிலிருந்து தப்பிப்பார்கள் என நம்பப்பட்ட போதும், தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் 5 வரையான குழந்தைகளும் டெங்கு தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்கு தொற்றினால் 25 வயதான இளைஞன் ஒருவர் மூளைச்சாவடைந்து அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிர்ப்பலியெடுக்கும் அபாயமாக நம்மை சூழ்ந்துள்ள டெங்கை கட்டுப்படுத்த ஒரேவழி- நமது சூழலில் நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதே!

spot_imgspot_img

More like this
Related

பிரித்தானிய பொலிசாரால் தேடப்படும் யாழ் இளைஞன்!

பிரித்தானியாவில் குற்றச்செயலில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவரை பொலிசார்...

கொடூர குற்றவாளி பஸ் லலித் நாளை இலங்கை அழைத்து வரப்படுகிறார்!

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், டுபாய் காவல்துறையால் கைது செய்யப்பட்ட, சக்திவாய்ந்த...

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்