சூரி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில், சூரி வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு விடுதலை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சூரியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால், போஸ்டரில் விஜய் சேதுபதி கைவிலங்குடன் இருப்பது போன்றும், சூரி துப்பாக்கியை வைத்திருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது. வெற்றிமாறன் மற்றும் எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
இந்த நிலையில், இந்தப் பட த்தில் இயக்குநர் கௌதம் மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆம், காவல்துறை உயரதிகாரியாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருடனான காட்சியில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கௌதம் மேனன் தொடர்புடைய காட்சிகள் 10 நாட்கள் படமாக்கப்பட்டதாகவும், இன்னும் ஒரு சில காட்சிகள் சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதில், கௌதம் மேனன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கிட்டத்தட்ட விடுதலை பட த்தின் 70 சதவிகித படப்பிடிப்பு முழுவதும் முடிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 30 சதவிகித படப்பிடிப்பு காட்சிகளும் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது செங்கல்பட்டு பகுதியில் விடுதலை பட த்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.