கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு அஜர்பைஜானில் நடைபெற இருந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இந்தியாவின் புதுடெல்லி நகரில் கடந்த மார்ச் மாதத்தில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்றன. மொத்தம் 10 நாட்கள் நடந்த இந்த போட்டியில் 53 நாடுகளை சேர்ந்த 294 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
22 நாடுகளின் வீரர்கள் பதக்கங்களை தட்டிச் சென்றனர். இந்நிலையில், அஜர்பைஜான் நாட்டின் பகு நகரில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி 2021 நடைபெற இருந்தது. ஆனால், அந்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளால் போட்டியை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றி சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், அஜர்பைஜானில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கவனத்தில் கொண்டு அஜர்பைஜான் குடியரசின் அமைச்சர்கள், போட்டியை நடத்துவது முறையாக இருக்காது மற்றும் பாதுகாப்பற்றது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து வருகிற ஜூன் 21ம் தேதி முதல் ஜூலை 2ம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டிருந்த போட்டிகள் ரத்து செய்யப்படுகின்றன என தெரிவித்துள்ளது.