‘சாட்டை’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை மஹிமா நம்பியார். குற்றம் 23, அகத்திணை, மகாமுனி உட்பட பல படங்களில் நடித்த அவர் மலையாளத்தில் நடித்துள்ள ‘ஆர்டிஎக்ஸ்’ படம் வெற்றிபெற்றுள்ளது. இப்போது ‘சந்திரமுகி 2’, ‘ரத்தம்’, முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையான ‘800’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது:
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையில் அவர் மனைவி மதிமலராக நடிக்கிறேன். படப்பிடிப்பு இலங்கையில் நடந்தது. கிரிக்கெட் வீரராக மட்டுமே அவரை அனைவருக்கும் தெரியும். அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களையும் உலகம் அறிய வேண்டும். அவர் பற்றிய பார்வையை இந்தப் படம் மாற்றும் என நம்புகிறேன். முரளிதரன் திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். அதில் சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. வீட்டில் திருமணம் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது முரளிதரனுக்குத் திருமண எண்ணம் இல்லை. ஆனால், மதிமலரை பார்த்ததும் அவருக்கு அந்த ஆசை வந்துவிட்டது. இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.
‘சந்திரமுகி 2’ படத்தில் ராகவா லாரன்ஸ் மாஸ்டருக்கு ஜோடியாக நடித்துள்ளேன். இதில் மூத்த கலைஞர்களுடன் பணியாற்றியது சிறந்த அனுபவம். மலையாளத்தில் இப்போது வேறு படங்களில் நடிக்கவில்லை. தமிழ், மலையாளப் படங்களில் தொடர்ந்து நடித்து வருவது பிடித்திருக்கிறது.
திரையுலகம் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்கிறதா? என்று கேட்கிறார்கள். மற்றவர்களின் அனுபவத்தில் இருந்து இதற்கு நான் கருத்துதெரிவிக்க முடியாது. என்னைப் பொறுத்த வரையில் எந்த மோசமான அனுபவமும் எனக்கு நடக்கவில்லை. நான் யாராலும் தவறாக நடத்தப்பட்டதில்லை. இவ்வாறு மஹிமா நம்பியார் தெரிவித்துள்ளார்