சட்டவிரோத பிரமிட் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட Onmax DT என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநர் குழு உறுப்பினர் சம்பத் சண்டருவனுக்கு சொந்தமான 630 மில்லியன் ரூபா பெறுமதியான காணிகளை விற்கவோ, உரிமை மாற்றம் செய்யவோ kறு அறிவித்தல் வரை தடைவிதித்து கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று காணி பதிவாளர் அலுவலகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். .
மாத்தறை, களுத்துறை, ஹம்பாந்தோட்டை மற்றும் கடவத்தை பகுதிகளிலுள்ள 20 சொத்துக்கள் தொடர்பில் காணி பதிவாளர் அலுவலகங்களுக்கு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய இயக்குனரின் சொத்துக்களின் முகமதிப்பு 62 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும், அவை பிரமிட் திட்டங்களில் கிடைத்த வருமானம் என அடையாளம் காணப்பட்டுள்ளதால், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை நீதவான் கவனத்தில் எடுத்துள்ளார். இந்த சொத்துக்களை மாற்றவோ அல்லது விற்கவோ தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சந்தேக நபருக்கு சொந்தமான 8 காணிகளின் உரிமை அவரது மனைவிக்கும், 12 காணிகள் அவரது நண்பருக்கும் ஒரே நாளில் மாற்றி, மோசடியை மறைக்க முயன்றதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் கிடைத்ததையடுத்து, சொத்துக்களை விற்கவோ அல்லது மாற்றவோ தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
‘Onmax DT’ தனியார் நிறுவனத்தின் பணிப்பாளரான சம்பத் சண்டருவனுக்குச் சொந்தமான 62 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 20 காணிகளில் சூப்பர் ஹோட்டல் மற்றும் பல நவீன பாணியிலான சூப்பர் ஹவுஸ்கள் உள்ளடங்குவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மாத்தறை பிரதேசத்தில் சுப்பர் ஹவுஸ் மற்றும் சுப்பர் ஹோட்டல்களுடன் கூடிய 06 காணிகள், ஹம்பாந்தோட்டையில் 02 காணிகள், கடவத்தை பகுதியில் 02 காணிகள் மற்றும் களுத்துறை பிரதேசத்தில் 10 காணிகளை மாற்றுவதற்கும் விற்பனை செய்வதற்கும் தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வங்கிக் கணக்குப் பதிவேடுகளின்படி மத்திய வங்கியால் தடை செய்யப்பட்ட கணக்குகளில் 790 மில்லியன் ரூபாய் பணம் இருப்பது தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.
இயக்குநர் குழுவின் வங்கிக் கணக்கு விவரங்களின்படி, சாரங்க ஜெயநாத்தின் வங்கிக் கணக்கில் ரூ.180 மில்லியன் மற்றும் இயக்குனர் கயாஷனின் வங்கி கணக்கில் ரூ. 20 மில்லியன், சம்பத் சண்டருவனின் 16 வங்கிக் கணக்குகளில் ரூ.550 மில்லியன், அதுல இந்திக்கவின் வங்கிக் கணக்கில் ரூ.20 மில்லியன் ரூபாவும், தனஞ்சய ஜெயநாத்தின் வங்கிக் கணக்கில் ரூ.110 மில்லியன் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.
Block Chain Analysis எனப்படும் விசாரணையானது மத்திய வங்கியின் நிதிப் பிரிவுடன் இணைந்து நடத்தப்பட்டதில், இந்தப் பணம் செல்லும் கடைசிக் கணக்கு (பணப்பை) இலங்கையர் ஒருவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்ததாகவும் அவர் ஒரு அவுஸ்திரேலியர் அல்லவென்றும் குற்றப்புலனாய்வுத்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிறுவனம் சட்டவிரோத பிரமிட் ஒப்பந்தங்கள் மூலம் 110 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். இந்நிறுவனத்தின் ஆறு இயக்குனர்கள் வெளிநாடு செல்ல தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அவற்றில் 10 பேர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இரண்டு முறைப்பாட்டாளர்களிடம் இருந்து மட்டும் 5 கோடி ரூபாய்க்கு மேல் இந்த மோசடி பேர்வழிகள் மோசடி செய்துள்ளதாக புகார்கள் தெரிவிக்கின்றன.