பள்ளியில் படிக்கும் மாணவரை சக மாணவர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டினர். அதைத் தடுத்த சகோதரிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த அதிர்ச்சியில் தாத்தா உயிரிழந்தார். இதற்கு சாதிய மோதலே காரணம் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த முனியாண்டி- அம்பிகாபதி தம்பதியின் மகன் சின்னதுரை (17). கூலித் தொழிலாளியான முனியாண்டி சில வருடங்களுக்கு முன்பு மனைவியைப் பிரிந்து சென்றுவிட்டார். அதனால் சின்னதுரையும் அவரது சகோதரி சந்திரா செல்வி (14) ஆகியோரை தாய் அம்பிகாபதி பராமரித்து வருகிறார். அவர் சத்துணவுப் பணியாளராகப் பணியாற்றிவருகிறார்.
சின்னதுரை தன் தாய் மற்றும் சகோதரியுடன் தாத்தா கிருஷ்ணன் வீட்டில் வசித்தபடியே வள்ளியூரிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் நன்றாகப் படிக்கும் அவரை ஆசிரியர்கள் புகழ்ந்து பேசியிருக்கின்றனர். ‘சின்னதுரையைப்போல அனைவரும் நன்றாகப் படிக்க வேண்டும்’ என்று சொன்னதால் நாங்குநேரியைச் சேர்ந்த சக மாணவர்கள் சிலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சின்னதுரை மீது ஆத்திரத்தில் இருந்த உள்ளூரைச் சேர்ந்த சில மாற்று சாதி மாணவர்கள், சின்னதுரையின் சைக்கிள் டயரில் காற்றைப் பிடுங்கி விடுவது, அவரது பையை எடுத்து மறைத்து வைப்பது உள்ளிட்ட சேட்டைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். தன்னை உள்ளூர் மாணவர்கள் ராக்கிங் செய்வதால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தவர் சில தினங்களாகப் பள்ளிக்குச் செல்லாமல் இருந்திருக்கிறார்.
நன்றாகப் படிக்கும் மாணவரான சின்னதுரை தொடர்ச்சியாகப் பள்ளிக்கு வராததால் ஆசிரியர்கள் சிலர் அது பற்றி அவரின் தாயிடம் தகவல் சொல்லியிருக்கிறார்கள். அதனால் தாய் விசாரித்தபோது நடந்த விவரங்களைச் சொல்லி அழுதிருக்கிறார். அதனால் அவரை அழைத்துக்கொண்டு தாய் அம்பிகாபதி பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் விவரத்தைச் சொல்லியிருக்கிறார். அதனால், ஆசிரியர்கள் சக மாணவர்கள் சிலரை அழைத்துக் கண்டித்திருக்கின்றனர்.
ஆசிரியர்கள் கண்டித்ததால், சின்னதுரை மீது ஆத்திரத்தில் இருந்த மாணவர்கள் ஆறு பேர் கையில் அரிவாளுடன் 9ஆம் திகதி இரவு 10:30 மணிக்கு நாங்குநேரியிலுள்ள சின்னதுரை வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீட்டில் இருந்த சின்னதுரையை கொடூரமாக அரிவாளால் வெட்டியிருக்கின்றனர். அதைத் தடுத்த அவரின் சகோதரி சந்திரா செல்விக்கும் வெட்டு விழுந்திருக்கிறது.
உயிருக்கு பயந்து சின்னதுரை வீட்டின் வெளியே ஓடியிருக்கிறார். ஆனாலும் அந்தக் கும்பல் அவரை விரட்டிச் சென்று வெட்டியிருக்கிறது. அதில், தலை, முதுகு, கை, கால்களில் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில் கீழே விழுந்திருக்கிறார். அதற்குள்ளாக அவரது அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதி மக்கள் ஓடிவந்ததால், அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இது குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தும் உடனடியாக யாரும் வராததால், ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டிருக்கின்றனர்.
நள்ளிரவில் நடந்த சாலைமறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், போலீஸார் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது மன அழுத்தத்திலிருந்த சின்னதுரையின் தாத்தா கிருஷ்ணன் அதே இடத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதற்கிடையே, வெட்டுக்காயமடைந்த சின்னதுரை, அவரின் சகோதரி சந்திரா செல்வி ஆகியோர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த நாங்குநேரி போலீஸார், ஆறு சிறுவர்களைக் கைதுசெய்திருக்கின்றனர். அதில் நான்கு சிறுவர்கள் சின்னதுரையுடன் படிப்பவர்கள். இருவர் அதே பள்ளியில் படித்துவிட்டு இடைநிறுத்தம் செய்த முன்னாள் மாணவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சிறுவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.




