சுழிபுரம், பறாளாய் முருகன் ஆலயத்தில் சங்கமித்திரை கொண்டு வந்த அரச மரங்களிலொன்று நாட்டப்பட்டது என 1926ஆம் ஆண்டு வெளியான பண்டைய யாழ்ப்பாணம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொக்குவிலை சேர்ந்த முதலியார் செ.இராசநாயகம் எழுதிய பண்டைய யாழ்ப்பாணம் என்ற நூலின் 64வது பக்கத்தில் இந்த குறிப்பு உள்ளது.

அப்போதைய ஆங்கிலேய அரசாங்கத்தில் யாழப்பாணத்தில் முக்கிய நிர்வாக பதவிகளை வகித்தவர் முதலியார் செ.இராசநாயகம்.
மகாவம்சம், யாழ்ப்பாண வைபமாலை உள்ளிட்ட பண்டைய நூல்களில் காணப்படும் குறிப்புக்களை தொகுதித்து, பண்டைய யாழ்ப்பாணம் என்ற நூலை எழுதியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிருட்டிணசுவாமி அய்யங்கார் அதற்கு முன்னுரை எழுதியிருந்தார்.
இதேவேளை, சங்கமித்திரை இலங்கைக்கு வந்தார், அரச மரம் கொண்டு வந்தார் என்பதற்கான எந்த கல்வெட்டு, தொல்பொருள் ஆதாரங்களும் இல்லை. இலக்கிய ஆதாரம் மட்டுமேயுள்ளது.
மகாவம்சம் அல்லது வேறு ஏதேனுமொரு புத்தக குறிப்பின் அடிப்படையில் இராசநாயகம் இந்த குறிப்பை பதிவிட்டிருக்கலாம்.
அசோகரின் கல்வெட்டிலும் மகிந்தன் தாமிரபரணிக்கு சென்றார் என்ற குறிப்பு மட்டுமேயுள்ளது.
அதேவேளை, பறாளாய் முருகன் அரச மர வர்த்தமானியில் முதலியார் இராசநாயகத்தின் புத்தக குறிப்பையே, தொல்லியல் திணைக்களம் பயன்படுத்தியுள்ளது.




