நீர்கொழும்பு, ஏத்துகால கடற்கரையில் பாதுகாப்பற்ற இடத்தில் நீராடச் சென்ற இளைஞர்கள் குழுவில் மூவர் நேற்று (23) பிற்பகல் காணாமல் போயுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போனவர்கள் சந்துபுரம் கொஸ்லந்தையைச் சேர்ந்த சத்தியவேல் சிறிவின் (23), சுன்னாகம் மேற்கை சேர்ந்த ஜெகதீஸ்வரன் ஜெயலக்ஷ்மன் (23) மற்றும் டயகம ஹட்டனைச் சேர்ந்த வடிவேல் அரவிந்த குமார் (20 ) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க , கனுவ பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சுமார் பத்து பேர் கொண்ட குழுவொன்று கடற்கரைக்கு குளிப்பதற்கு வந்துள்ளனர்.
இவ்வாறு வந்த குழுவினர் பொலிஸ் உயிர்காப்புக் குழுவினர் நிலைகொண்டுள்ள இடத்திற்கு வெளியில் உள்ள இடத்திலிருந்து நீரில் இறங்கியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்கள் மூவரும் நீராடும்போது அலையில் அடித்துச் செல்லப்பட்டதை அறிந்ததும் கடற்கரையில் கடமையாற்றியிருந்த உயிர்காப்புப் பொலிஸார் அவர்களைக் காப்பாற்ற முயற்சித்த போதிலும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் சடலங்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




