சீன பிரஜையை நாடு கடத்த தனி விமானம் கோரியது இலங்கை!

Date:

அண்மையில் போலி கடவுச்சீட்டில் இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற போது கைது செய்யப்பட்ட சீன சந்தேக நபர் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் சீனாவுக்கு நாடு கடத்தப்படவுள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றத்திற்காகத் தேடப்படும் சீனப் பிரஜையை அவரது நாட்டிற்கு நாடு கடத்துவதற்கு பாதுகாப்புப் பணியாளர்களுடன் தனி விமானம் ஒன்றை வழங்குமாறு சீனத் தூதரகத்திடம் கோரப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 18ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சீன சந்தேகநபரின் நடத்தையை கருத்திற்கொண்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆபிரிக்காவில் உள்ள கினியாவின் போலி கடவுச்சீட்டு அவரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய, சீன சந்தேக நபர் புதன்கிழமை அல்லது வியாழன் அன்று நாடு கடத்தப்படுவார் என்றும், அவரை நாடு கடத்துவதற்கான வழிவகைகளை ஏற்பாடு செய்ய திணைக்களம் சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறினார்.

அவர் வெலிக்கடை இடைநிலை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சீனப் பிரஜையை நாடு கடத்துவதற்கான குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் உத்தரவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி இந்த வாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதியரசர் பந்துல கருணாரத்ன (மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர்) மற்றும் நீதியரசர் அஷான் மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கட்கிழமை இந்த மனு நிராகரிக்கப்பட்டது.

சட்டத்தரணியான அசோக விஜயவர்தனவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீன பிரஜை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ விஜயவர்தனவும், சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பிரஸ்ன பண்டாரவும் ஆஜராகினர்.

நீதிமன்ற விசாரணையின் போது, 2019 ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றத்திற்காக லி பான் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரென்பதும், அவரை கைது செய்ய சீன நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளதும் தெரியவந்தது. இருப்பினும், லி தனது நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

குறித்த நபர் கினியா கடவுச்சீட்டைப் பயன்படுத்தி டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார். எனினும் கினியா கடவுச்சீட்டு போலியானது என இன்டர்போல் தெரிவித்துள்ளது. சீன நாட்டவர் சீன அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளி என்றும், எனவே அவரை சீனாவுக்குத் திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் சீனத் தூதரகம் கூறியது. அவரை வேறு நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் தூதரகம் கேட்டுக் கொண்டது.

குடிவரவு அதிகாரிகள் தன்னை தாக்கியதாக லி குற்றம் சாட்டியிருந்தார்.

இருப்பினும், நீதித்துறை மருத்துவப் பரிசோதனையில், காயங்கள் பற் தூரிகையால் சுயமாக ஏற்படுத்தப்பட்டவை என்பது தெரியவந்தது.

இதற்கிடையில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு, லிக்கு “சிரமம் இன்றி பயணத்தை மேற்கொள்ள” அனுமதி வழங்குமாறு கோரி கடிதம் எழுதியுள்ளார். அவர் முதலீட்டாளர் என்றும், அதனால் அவ்வாறு கோரிக்கை விடுத்ததாகவும் குறிப்பிட்டார். சீனப் பிரஜையை அழைத்து வந்த இரண்டு சீன நிறுவனங்களிடம் பின்னர் எழுத்துமூலக் கோரிக்கையை தாம் முன்வைத்ததாகத் தெரிவித்தார்.

சீன முதலீட்டாளர் ஒருவரிடம் இரண்டு கடவுச்சீட்டுகள் இருப்பதாகவும், அவற்றில் ஒன்று உண்மையான சீனக் கடவுச்சீட்டு என்றும் நிறுவனத்தின் பிரதிநிதி தன்னிடம் கூறியதாகவும், எனவே அந்த நபரை நாட்டுக்குள் கொண்டுவருவதில் தலையிட்டதாகவும் அவர் கூறினார்.

வீட்டுவசதி அமைச்சின் கீழ் 2,500 வீடுகள் கட்டப்பட்ட திட்டத்தில் இரு நிறுவனங்களும் ஆர்வமுள்ள தரப்பினராக இருப்பதாக அவர் கூறினார்.

அருந்திக்க பெர்னாண்டோ, போதைப்பொருள் வழக்கில் உள்ள குற்றச்சாட்டுகள் உட்பட, சீன முதலீட்டாளரின் பின்னணி குறித்து தனக்கு தெரியாது என்று கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

தீபாவளியன்று விபத்தில் சிக்கிய மனோ கணேசன்: மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக வழக்கு!

நவம்பர் 8 ஆம் திகதி தீபாவளித் திருநாளின் இரவு, நாடாளுமன்ற உறுப்பினரும்...

ஹிருணிகாவின் மேல்முறையீடு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

2015-ஆம் ஆண்டு இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற...

இலங்கை வந்த நடிகை பூஜா ஹெக்டே

இந்தியத் திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே, இலங்கைக்கான குறுகிய காலப் பயணம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்