திருமணமாகாத இளம் பெண்களின் ஜாதகத்தை இலவசமாகப் பார்ப்பதாக இணையத்தில் விளம்பரம் செய்து, கவர்ச்சிகரமான இளம் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களைப் பெற்று, அவர்களை விபச்சாரிகள் என்று விளம்பரப்படுத்தி, அந்த விளம்பரங்களை அகற்றுவதற்காக பெண்களிடம் பணம் பறித்த ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாத்தறையில் வழிபாட்டிடமொன்றை நடத்தி வந்த ஒருவரே கைதானார்.
பெண்களின் கையடக்கத் தொலைபேசி இலக்கங்களைக் குறிப்பிட்டு விபச்சாரிகள் எனப் பெயரிட்டு இணையத்தில் வெளியான விளம்பரங்களை அகற்றுவதற்காக சந்தேகநபர் பெண்களிடம் இலட்சக்கணக்கான ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இலவசமாக ஜாதகம் பார்ப்பதாக முகநூல் பக்கத்தில் விளம்பரம் செய்த சந்தேகநபர், நிகழ்காலத்தை கணிக்க அவர்களின் கடந்த காலத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி, கணக்கில் இணைக்கப்பட்ட இளம் பெண்களின் கையடக்க தொலைபேசி எண்களை பெற்றுள்ளார்.
பின்னர், அவர் அந்த இளம் பெண்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களுடன், அவர்களை விபச்சாரிகள் என்று விளம்பரப்படுத்தியுள்ளார்.
அந்த விளம்பரங்களை அகற்ற பணம் கேட்டுள்ளனர். சந்தேக நபர் இளம் பெண்களை ஏமாற்றி இலட்சக்கணக்கான ரூபா பணத்தை பெற்றுக்கொண்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கிட்டத்தட்ட 20 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற பண மோசடி வழக்கில் குறித்த சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.
இந்த சந்தேக நபரை மே 8 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதியளிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த சஷி தவான் என்ற சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டார்.




