அமீரகத்தின் புஜேரா துறைமுகம் அருகே இஸ்ரேல் நாட்டின் வர்த்தக கப்பல் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது ஈரானின் பதிலடியாக இருக்கலாம் என இஸ்ரேல் நாட்டு அதிகாரிகள் கருதுகின்றனர்.
வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அமீரக துறைமுகங்கள் முக்கிய சந்திப்பு மையங்களாக திகழ்ந்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த கப்பல்கள் அமீரக துறைமுகங்களுக்கு வர்த்தக ரீதியில் வந்து செல்கின்றன.
இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான ‘ஹைப்பரியான் ரே’ என்ற சரக்கு கப்பல் அமீரகத்தின் புஜேரா துறைமுக பகுதியில் வந்துகொண்டிருந்தது. இந்தநிலையில் அந்த கப்பல் மீது மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். சரக்கு கப்பல் என்பதால் நல்லவேளையாக இதில் எந்த விதமான அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என்று ஜெருசலேம் தொலைக்காட்சி நிறுவனம் தகவல் அளித்துள்ளது.
ஏற்கனவே ஈரான் நாட்டின் நட்டன்ஸ் யுரேனியம் செறிவூட்டும் அணு உலையை இஸ்ரேல் ஆளில்லா உளவு விமானம் மூலம் உளவு பார்ப்பதாக பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் அங்கு விபத்து ஒன்று ஏற்பட்டது. இது பயங்கரவாத சதி என குற்றம் சாட்டப்பட்டதுடன், இதில் இஸ்ரேல் சைபர் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என ஈரான் சந்தேகித்தது.
எனவே அதன் வெளிப்பாடாகவே பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் செய்திருக்கலாம் என இஸ்ரேல் கருதுவதாக அந்த நாட்டின் ஊடகங்கள் கருத்து தெரிவித்து வருகிறது.
பொருளாதர தடைவிதிப்பு காரணமாக ஈரான்-அமெரிக்கா இடையே மோதல் வலுபெற்று வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் வளைகுடா பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.