இயற்கை பேரனர்த்தம்: 2 பேர் பலி; 109 வீடுகள் சேதம்!

Date:

சீரற்ற காலநிலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,675 ஆக அதிகரித்துள்ளது.

கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் நான்கு மாவட்டங்களில் 387 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் மோசமான வானிலை காரணமாக ஒரு வீடு இடிந்துள்ளதுடன் மேலும் 109 வீடுகள் சேதமடைந்துள்ளன.

கண்டி மாவட்டத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக அக்குரணை நகரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அலவத்துகொட பகுதியில் மண் சரிவில் சிக்கி 18 வயது யுவதியும், 16 வயது சிறுவனும் உயிரிழந்தனர்.

சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு அபாயம் நிலவிய கண்டி சுடுஹும்பொல பிரதேசத்தில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

கனமழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும், பயிர்ச்செய்கைக்காக நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஆறுகள் மற்றும் நீரோடைகளை பயன்படுத்தும் போது பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென நீர்ப்பாசன இயக்குநர் (நீர் மேலாண்மை) டி.அபேசிறிவர்தன தெரிவித்தார்.

கண்டி, மாத்தளை, பதுளை, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும் அபேசிறிவர்தன தெரிவித்தார்.

அநுராதபுரம் யானோயா நீர்த்தேக்கத்தில் சிறிதளவு வெள்ள நிலைமை காணப்படுவதாகவும், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் பல வான் கதவுகள் மற்றும் பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தில் 04 வான் கதவுகள் நேற்று (25) பிற்பகல் வரை திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குருநாகல் தெதுரு ஓயா பகுதியில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக புத்தளம், ஹலவத்தை மற்றும் தெதுரு ஓயாவை இணைக்கும் தாழ்நிலங்களில் சில சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்றும் அபேசிறிவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, மலையக மார்க்கத்தில் புகையிர சேவைகள் பாதிக்கப்பட்டன. கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்குமிடையிலான புகையிரதங்கள் நேற்று இரத்து செய்யப்பட்டன.

இதேவேளை, இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று காலை இலங்கையின் மேற்கு கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாலைக்குள், இந்த அமைப்பின் தாக்கம் நாட்டிலிருந்து விலகிச் செல்வதால், நாட்டின் மீதான தாக்கம் குறையும்.

இதேவேளை, நாடு முழுவதும் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் சட்ட விரோத மதுபானம் போதைப்பொருள் விற்பனை ஒழித்து தருமாறு கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் (சுவிஸ் கிராமம்)  நீண்டகாலமாக  பொலிசாரின் ஆதரவுடன் சட்டவிரோத...

‘எமக்கு வேறு வழியே இல்லை’: ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்தது பற்றி இந்திய தூதர் விளக்கம்!

வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அந்நாட்டை விட்டு வெளியேறிய பிறகு,...

முஸ்லிம் காங்கிரஸின் சட்டத்தரணிகள் அமைப்பு உருவாக்கம் – ரவூப் ஹக்கீம் தலைமையில் முதலாவது கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட பிரிவாகக் கட்சியின் சட்டத்தரணிகள் அமைப்பு மிகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்