கொரோனா அச்சத்தினால் 2 வருடங்களாக வீட்டுக்குள் அடைந்திருந்த தாயும், மகளும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது.
உள்ளூர் சுகாதார பிரிவினரும், பொலிசாரும் சென்ற போது, பெண்கள் கதவை திறக்க மறுத்து விட்டனர். பின்னர் பலவந்தமாக கதவை உடைத்து உள்நுழைந்து, அவர்கள் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காக்கிநாடாவில் உள்ள குய்யேறு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடந்தது.
தாயார் மணியும் அவரது மகள் துர்கா பவானியும் 2020 ஆம் ஆண்டிலிருந்து வீட்டிற்குள் அடைந்துள்ளனர். கோவிட் தொற்று பரவ ஆரம்பித்ததும், வீட்டை பூட்டிக் கொண்டு உள்ளே இருந்து விட்டனர். தொற்றுநோய் கட்டுக்குள் வந்தாலும், அவர்கள் தொடர்ந்து தனிமையில் இருந்தனர்.
மணியின் கணவர் அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் அளித்து வந்தார், ஆனால் கடந்த ஒரு வாரமாக, அவர்கள் அவரை தங்கள் அறைக்குள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, உள்ளூர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.
சுகாதார பணியாளர்களும் பொலிசாரும் சென்ற போது, தாயும் மகளும் அறையின் கதவை திறக்க மறுத்ததால், சுகாதாரப் பணியாளர்கள் எதிர்ப்பை எதிர்கொண்டனர். பின்னர் கதவு உடைக்கப்பட்டு, இருவரும் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இரு பெண்களும் மனநிலை சரியில்லாதவர்கள் என சந்தேகிக்கப்படுவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆந்திராவில் இதுபோன்ற இரண்டாவது சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.
கோவிட் தொற்றால் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் காரணமாக மூன்று பெண்கள் கிட்டத்தட்ட 15 மாதங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். ஒரு தம்பதியும் அவர்களது இரண்டு குழந்தைகளும் கோவிட் காரணமாக அண்டை வீட்டாரில் ஒருவர் இறந்ததை அடுத்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர்.
கிராமத்து தன்னார்வத் தொண்டர் ஒருவர் அரசாங்கத் திட்டத்தின் கீழ் தங்களுக்கு வீட்டு மனையை வழங்குவதற்காக அவர்களின் கட்டைவிரல் பதிவைப் பெறச் சென்றபோது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. தொண்டர் தகவல் வழங்கியதை அடுத்து, அதிகாரிகள் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




