பிரித்தானியாவிற்கான மியான்மர் தூதர், தூதரக கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஆங் சான் சூகியை விடுவிக்க கோரியதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மியான்மரில் கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி இராணுவ சதிப்புரட்சி இடம்பெற்றது. ஜனநாயக தலைவர்களை சிறைபிடித்த இராணுவம், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
இராணுவத்தின் நடவடிக்கையை எதித்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500 க்கும் மேற்பட்டோர் இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிரித்தானியாவிற்கான மியான்மர் தூதர் கியாவ் ஸ்வார் மின், ஆங் சான் சூகியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து மியான்மரின் இராணுவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் லண்டனில் உள்ள தூதரக கட்டிடத்தை விட்டு அவரை வெளியே அனுப்பினர். அவரை உள்ளே நுழைய விடாமல் அவர்கள் கட்டிடத்தை பூட்டியுள்ளனர்.
தன்னை வெளியேறுமாறு உத்தரவிட்டதாகவும், இனி தான் நாட்டின் பிரதிநிதி இல்லை என்றும் தன்னிடம் கூறியதாக கியாவ் ஸ்வார் மின் தெரிவித்தார்.
கியாவ் ஸ்வார் மின் லண்டனில் உள்ள மியான்மர் தூதரக கட்டிடத்திற்கு வெளியே வீதியில் நின்றுக்கொண்டு லண்டன் பெருநகர காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
நேற்று புதன்கிழமை, தூதரகத்திற்கு வெளியே காரில் இரவை அவர் கழித்தார்.
தன்னை மியான்மருக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும், அனுப்பப்படும் பட்சத்தில் சித்திரவதைக்கு உள்ளாக நேரிடும் என்றும் அவர் ருவிற்றரில் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து உள்துஐற அமைச்சர், அவரது தைரியத்தை பாராட்டி ருவிற்றரில் பதிவிட்டுள்ளார்.