உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்பாக ஆராயும் ஆணைக்குழுவின் அறிக்கையை நாம் முழுமையாக நிராகரிக்கவில்லை அதில் சாதகமான பல விடயங்கள் உள்ள போதும் தாக்குதலின் பின்னணியில் இருக்கும் மரம் குறித்து ஆராய வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன், தாக்குதலின் மறைகரமாக செயற்பட்டது இஸ்ரேலிய புலனாய்வு பிரிவா என்ற சந்தேகத்தையும் எழுப்பினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ள போதிலும், உண்மையான சூத்திரதாரி கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் கதாசிரியராக இருந்திருக்கலாம். சஹ்ரான் கதாநாயகனாக இருந்திருக்கலாம். சாரா என்ற நடிகை காணாமல் போயுள்ளார். இவற்றிற்கிடையே தயாரிப்பாளர் யார் என்பதே கேள்வி.
சஹ்ரானை பயன்படுத்திய நபர் யார்?. இந்த நிலையில், தாக்குதலின் பின்புலத்தில் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு செயற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நமது புலனாய்வு பிரிவிடம் விசாரணை நடத்துகிறார்கள்.
அபுஹிம் என்பவரிடம் இருந்து உளவுத்தகவல்களை பெற்றுக்கொள்ளும் போது, இந்தியாவிடமிருந்து தகவல்களை பெற்றுக்கொள்ளும் பொது, இது எப்படி கிடைத்ததென வினவுகிறார்கள். அப்படியாயின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்கும் போது பெற்ற தகவலா என வினவுகின்றனர். உயிரோடு உள்ள ஒருவரிடமிருந்தே தகவலை பெற்றதாக தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்தாரிகள் சிலரை நமது புலனாய்வு பிரிவு செல்லமாக பராமரித்துள்ளது.
அஹமட் லெப்பே முகமது நியாஸ். சாய்ந்தமருதில் உயிரிழந்த இவருக்கு ஆயுதப்பயிற்சி வழங்கியது யார்? அஹமட் மில்கான். தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சிஐடியினர் ஆமி மொகைதீனை தமக்கு தகவல் வழங்குபவராக மாற்றிக் கொள்கிறார்களே தவிர, அவர்களை கைது செய்வதில்லை. ஆமி மொகைதீனும் இதனுடன் தொடர்புபட்டுள்ளார்.
இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவு குறித்தும், அபு ஹிம் என்பவர் குறித்தும் தேடுகிறார்களா என்றும் ஆராய வேண்டும்.