ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு அருகே சுமார் 100 அகதிகளுடன் பயணித்த படகு மீட்கப்பட்ட நிலையில், அதில் பயணித்த 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எல் ஹியர்ரோ (El Hierro) தீவிலிருந்து சுமார் 72 கிலோமீற்றர் தொலைவில் குறித்த படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள்
மீட்புப் பணியாளர்கள் படகிலிருந்து ஆரம்பத்தில் 8 முதல் 10 சடலங்களை மீட்டுள்ளனர். மேலும், ஆபத்தான நிலையில் இருந்த ஆறு பேர் விமானம் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பின்னர், மொத்தம் 14 பேரின் சடலங்கள் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மற்றொரு படகில் பயணித்த 84 பேர் உயிருடன் மீட்கப்பட்டு பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
கேனரி தீவுகளுக்கு அதிகரிக்கும் அகதிகள் வருகை
கடந்த ஒக்டோபர் மாதம் முதல் ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த நவம்பர் 25ஆம் திகதி ஒரே நாளில் 2,100 அகதிகள் கேனரி தீவுகளை வந்தடைந்துள்ளனர். இது இதுவரையான அதிகபட்ச வருகை எண்ணிக்கையாகப் பதிவாகியுள்ளது.
ஆபத்தான கடல் பயணம்
ஆப்பிரிக்கப் பகுதிகளிலிருந்து ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டு ஸ்பெயினைச் சென்றடைய முயற்சிக்கும் அகதிகள் பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாகப் பதிவாகி வருகின்றன.
இந்நிலையில், கேனரி தீவுகளை நோக்கிய அகதிகளின் வருகை அதிகரித்து வருவதுடன், கடல் பயணங்களின்போது ஏற்படும் உயிரிழப்புகளும் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளன.




