வங்காள விரிகுடாவின் தெற்குப் பகுதி மற்றும் அதனை அண்மித்த மேற்கு-மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள அக்குவான் (Akvan) புயல், தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2026 நவம்பர் 18ஆம் திகதி இரவு 11.30 மணியளவில், குறித்த புயல் திருகோணமலையிலிருந்து சுமார் 740 கிலோமீற்றர் வடகிழக்குத் திசையில், வட அகலாங்கு 13.9° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.3° பகுதியில் மையம் கொண்டிருந்தது.
இந்தப் புயல் தொடர்ந்து வடக்கு நோக்கிய சாய்வுடன் வடமேற்குத் திசையில் நகர்ந்து, எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி காலை 11.30 மணியளவில் இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடந்து நிலப்பகுதிக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு விசேட அறிவுறுத்தல்
இதன் காரணமாக, வட அகலாங்கு 10° முதல் 20° வரையும், கிழக்கு நெட்டாங்கு 80° முதல் 95° வரையும் உள்ள கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல் பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடல் பயண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி தங்களது படகுகளைச் செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை அறிவித்தல்களைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளின் வானிலை நிலவரம்
மழை நிலைமை:
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றின் நிலைமை:
கடற்பரப்புகளில் வடமேற்கு அல்லது வடக்கு திசையிலிருந்து மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.
காங்கேசன்துறை முதல் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
கடல் நிலைமை:
காங்கேசன்துறை முதல் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
இலங்கையைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான கொந்தளிப்புடன் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அச்சமயங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பான நிலையை அடையக்கூடும்.
எனவே, மீனவர்கள் மற்றும் கடற்பயணங்களில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




