கற்பிட்டி ‘விஜய’ கடற்படை தளத்தில் இருந்த ‘டோரா’ ரக அதிவேகத் தாக்குதல் படகிலிருந்து கடற்படை வீரர் ஒருவர் துப்பாக்கியைத் திருடி, அதை பாதாள உலகக் கும்பல் ஒன்றிற்கு விற்க முயன்ற சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விரிவான விசாரணைகளை மேற்கொண்டது.
இதன் விளைவாக, கடந்த 9 ஆம் திகதி அந்த துப்பாக்கி மீட்கப்பட்டது. ரனல பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதுடன், மேலும் இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
‘டோரா’ படகிலிருந்து திருடப்பட்ட ஆயுதம், 4500302 என்ற வரிசை எண்ணைக் கொண்ட ரி-56 ரக தாக்குதல் துப்பாக்கியாகும்.
‘டோரா’ படகில் பணியாற்றிய கடற்படை வீரர் ஒருவரே, கடந்த 7 ஆம் திகதி இந்தத் துப்பாக்கியைத் திருடியது ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டது. அவர் எவ்வித சந்தேகமும் ஏற்படாத வகையில் தளத்திலிருந்து துப்பாக்கியை வெளியே கொண்டு வந்து, தளத்திற்கு வெளியே காரில் காத்திருந்த ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார்.
இது குறித்து ‘விஜய’ கடற்படை தளத்தின் ஒழுங்கு நடவடிக்கை பிரிவின் பொறுப்பாளர், புத்தளம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் (SSP) முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளைத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய கடற்படை வீரர் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட கடற்படை வீரர், அந்தத் துப்பாக்கியைத் தனது கூட்டாளிகள் இருவரிடம் கொடுத்து, தெற்குப் பகுதியைச் சேர்ந்த பாதாள உலகக் கும்பல் ஒன்றிற்கு 1.8 மில்லியன் ரூபாய்க்கு விற்கத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
கற்பிட்டியிலிருந்து காரில் துப்பாக்கியைக் கொண்டு சென்ற இரு சந்தேக நபர்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்தது.
இந்த இரு சந்தேக நபர்களிடமும் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ரனல பகுதியில் உள்ள மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.
இதற்கிடையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட கடற்படை வீரர் மற்றும் ஏனைய சந்தேக நபர்களை, மேலதிக விசாரணைகளுக்காகத் தொடர்ந்து தடுத்து வைக்க நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, சம்பந்தப்பட்ட கடற்படை வீரர், பாதாள உலகச் செயல்பாடுகள் அதிகம் நிலவும் தெற்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.




