பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, பல்கலைக்கழகம், தேசிய கல்விக்கல்லூரி அல்லது ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றில் முறையான கல்வி எதையும் பெறவில்லை என்று ‘தேசிய ஐக்கிய ஆசிரியர் சங்கம்’ (National Unity Teachers’ Union) தெரிவித்துள்ளது.
குறித்த சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அதன் பிரதிநிதிகள், மஹிந்த ஜயசிங்க ஒரு பயிற்சி ஆசிரியர் மட்டுமே என்றும், ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் ஆங்கில ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே அவர் நியமிக்கப்பட்டார் என்றும் குறிப்பிட்டனர்.
கெபித்திகொல்லாவ பிராந்தியத்தில் உள்ள ஒரு பின்தங்கிய பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றிற்கு நியமனம் பெற்ற பின்னர், அவர் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கி, ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தையும் ஏமாற்றியுள்ளதாக அந்தச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
டிப்ளோமா, பட்டங்கள், முதுகலைப் பட்டங்கள் மற்றும் கலாநிதிப் பட்டங்களைக் கொண்ட ஆசிரியர் சமூகத்தினர் அனைவரையும் மஹிந்த ஜயசிங்க ஏமாற்றியுள்ளதாக ‘தேசிய ஐக்கிய ஆசிரியர் சங்கம்’ மேலும் கூறியுள்ளது.




