யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பாகப் பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்துள்ள விளக்கங்களைச் சுயாதீனமாக ஆய்வு செய்யுமாறு கோரி, அமெரிக்கத் தமிழர் புலம்பெயர் அமைப்பு சுவீடனின் உப்சாலா பல்கலைக்கழகத்திற்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
பேராசிரியர் ராஜ் சோமதேவ முனைவர் பட்டம் பெற்ற உப்சாலா பல்கலைக்கழகத்தின் தொல்லியல், பண்டைய வரலாறு மற்றும் மரபுரிமைப் பாதுகாப்புத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ள இக்கடிதத்தில், அவரது அறிக்கை, அதற்கான ஆதாரங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆய்வு முறைகளைச் சுயாதீனமாக மதிப்பிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் அவை புதைக்கப்பட்ட சூழல் தொடர்பாக, தொற்றுநோய், பண்பாட்டு வழக்கங்கள் அல்லது இயற்கைப் பேரழிவு போன்ற காரணங்கள் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படும் விளக்கங்களே இந்தக் கோரிக்கைக்குக் காரணமாக அமைந்துள்ளன.
செம்மணி புதைகுழிகள் தொடர்பான விளக்கங்களை உறுதிப்படுத்தும் அறிவியல் ஆதாரங்கள் என்ன, அவற்றுடன் தொடர்புடைய குறிப்பிட்ட தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு ஏதேனும் அடையாளம் காணப்பட்டுள்ளதா என்பன குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அமைப்பு கோரியுள்ளது.
மேலும், சிறுவர்களின் பாடசாலைப் பைகள், தனிப்பட்ட உடைமைகள் மற்றும் எலும்புக்கூடுகளில் காயங்கள் காணப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்களைச் சுயாதீனமாகச் சரிபார்த்து மதிப்பிட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது.
புதைகுழிகளின் காலப்பகுதிக்கும் முன்வைக்கப்படும் வரலாற்று நிகழ்வுகளுக்கும் இடையில் பொருத்தம் உள்ளதா, முறைப்படியான இறுதிச்சடங்கு அடக்கங்கள் என்ற விளக்கத்துக்கு என்ன ஆதாரங்கள் உள்ளன, சட்டவிரோதக் கொலைகள் உள்ளிட்ட மாற்று விளக்கங்கள் எவ்வாறு மதிப்பிடப்பட்டன என்பனவும் ஆராயப்பட வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடயவியல் நோயியலாளர்கள், மானிடவியலாளர்கள் உள்ளிட்ட சுயாதீன நிபுணர்களின் பங்களிப்பைப் பெறுவதுடன், நேரடியாகக் கண்டறியப்பட்ட உண்மைகள், ஆரம்பநிலைக் கருதுகோள்கள் மற்றும் ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்பட்ட முடிவுகள் ஆகியவற்றைத் தெளிவாக வேறுபடுத்த வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களைத் தேடும் குடும்பங்களுக்கு, சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்பட்ட விளக்கங்கள் வழங்கப்பட வேண்டும் என அமெரிக்கத் தமிழர் புலம்பெயர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட அல்லது முறைப்படியான அடக்கங்கள் என்ற விளக்கம், உயிரிழப்புகளுக்கான காரணங்களைக் கண்டறியும் விசாரணைக்கு மாற்றாக அமையக்கூடாது என்றும், சாத்தியமான ஒவ்வொரு விளக்கமும் பாரபட்சமின்றி ஆராயப்பட வேண்டும் என்றும் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், பேராசிரியர் ராஜ் சோமதேவவின் நோக்கங்களை முன்கூட்டியே தீர்மானிப்பதோ அல்லது அவர் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டுவதோ இந்தக் கோரிக்கையின் நோக்கமல்ல எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மாறாக, அவரது ஆய்வு முறைகளை விளக்குவதற்கும் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கும் வாய்ப்பளித்து, முழுமையான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சுயாதீன மதிப்பீட்டை மேற்கொள்வதே இக்கோரிக்கையின் நோக்கம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
செம்மணி புதைகுழிகளுடன் தொடர்புடைய அனைத்து மனித எச்சங்கள், பதிவுகள் மற்றும் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், சுயாதீன சர்வதேச தடயவியல் ஆய்வுகளுக்கு வழிவகுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
விசாரணையின் முன்னேற்றம் குறித்த முக்கியமான தகவல்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கிடைப்பதை உறுதிசெய்வதுடன், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களைத் தேடும் குடும்பங்களுக்கு உண்மையை வெளிக்கொணரும் வகையில் முழுமையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
செம்மணி புதைகுழிகள் தொடர்பான கேள்விகளுக்கு அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் விடை காண்பதற்கும், தேவையான மேலதிக விசாரணைகளை அடையாளம் காண்பதற்கும் கல்விசார் ஆய்வும் சுயாதீன நிபுணத்துவமும் அவசியம் என அமெரிக்கத் தமிழர் புலம்பெயர் அமைப்பு தெரிவித்துள்ளது.




