பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக மனு!

Date:

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி ஊடகவியலாளர்களான எம்.எப்.எம்.பஸீர் மற்றும் தரிந்து உடுவரகெதர சார்பாக கௌரி சங்கரி சட்ட நிறுவனத்தின் சட்டத்தரணி தர்மராஜா தர்மஜா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்ப்ட்டுள்ள இந்த சட்ட மூலமானது அரசியலமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு அரசியலமைப்பின் 120 மற்றும் 121 பிரிவுகளின்கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், சட்டமா அதிபர் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார். மனுதாரர்கள், தாங்கள் இந்த மனுவைத் தனிப்பட்ட உரிமைகளுக்காக மட்டுமல்லாமல், இலங்கை மக்களின் உரிமைகளைப்பாதுகாத்தல், சட்டத்தின் ஆட்சியையும் அரசியலமைப்பையும் மதித்தல் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகிய பொது நலனுக்காகவும்இம்மனுவானது தாக்கல் செய்ய்ப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

18.09.2026 திகதியிடப்பட்ட வர்த்தமாணி அறிவிப்பில் வெளியிடப்பட்ட இந்த சட்ட மூலம், ஒக்டோபர் 6 ஆம் திகதி அன்று, பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்த சட்ட மூலம் 06.10.2026 பாராளுமன்றத்தில் முதல் வாசிப்பிற்காக முன்வைக்கப்பட்டது.

தற்போதுள்ள குற்றவியல் சட்டங்களின் கீழ் வரும் ஒரே மாதிரியான அல்லது ஒத்த செயல்களுக்கு இந்த சட்ட மூலம் ஒரு தனி சட்ட நடைமுறையை உருவாக்குவதாகவும் இதன்மூலம் அரசியலமைப்பின் 12(1) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள சட்டத்தின் முன் சமத்துவத்திற்கான உரிமை மீறபப்டுவதாகவும் இந்த மனு ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், “தேசியப் பாதுகாப்பு” மற்றும் “அவசரநிலை” போன்ற காரணங்களுக்காக எந்தவொரு அவசரநிலையும் அறிவிக்கப்படாத போதும் இந்த சட்ட மூலத்தின் பிரகாரம் அடிப்படை உரிமைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அனுமதிக்கிறது என்றும் மனுதாரர்கள் கூறுகின்றனர்.

மேலும், இந்த சட்ட மூலத்தின் 3வது பிரிவில் உள்ள “பயங்கரவாதம்” என்பதற்கான வரையறை தெளிவற்றதாகவும், மிகவும் பரந்ததாகவும் உள்ளது என்றும்அந்த மனு குற்றம் சாட்டுகிறது.

ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால் இச்சட்டமூலமானது அரசியலமைப்பின் 13(3) ஆம் உறுப்புரையின் கீழ்பாதுகாக்கப்பட்ட நியாயமான விசாரணைக்கான உரிமையையும், 13(5) ஆம் உறுப்புரையின் கீழ் பாதுகாக்கப்பட்ட குற்றமற்றவர் என்ற ஊகத்தையும் கடுமையாகப் பாதிக்கின்றது எனக் கூறுகின்றனர்.

இச்சட்டமூலமானது, அதன் அதிகப்படியான பரந்த குற்றங்கள், நிறைவேற்றுத் துறையின் தடுத்து வைப்பு அதிகாரங்கள் மற்றும் போதுமான நீதித்துறைப் பாதுகாப்பின்மை காரணமாக ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் ஆணைக்குழு உட்பட உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு உள்ளான சட்டமான 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை (PTA) நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பிரதியீடு செய்யவே ஒழுங்குப் பத்திரத்தில் வைக்கப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது நீண்ட மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட துஸ்பிரயோக வரலாற்றைக் கொண்டுள்ளது.

பொதுமக்களின் அதிகார வரம்பு தொடர்பான நிர்வாக அதிகாரங்களை வழங்கும் விதிகளையும் இதுகொண்டுள்ளது என்றும், இந்த சட்ட மூலம் முழுவதுமே நியாயமான விசாரணைக்கான உரிமை மற்றும் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி எனக் கருதப்படும் உரிமை ஆகியவற்றைப் பாதிக்கிறது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

தற்போது உள்ளவாறான “அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாத்தல்” எனும் தலைப்பிலான முன்மொழியப்பட்ட சட்டமூலம் அதன் ஏற்பாடுகள் அல்லது அதன் பிரிவுகள் அரசியலமைப்புக்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு முரணானவை என்றும், அத்தகைய சட்டமூலம் அல்லது அதன் ஏற்பாடுகள் அல்லது அதன் பிரிவுகள் அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையின் விதிகளின் கீழ் தேவைப்படும் சிறப்புப் பெரும்பான்மையினால் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே சட்டமாக மாற வேண்டும் என்ற கோரிக்கையுடனும் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இம்மனு சார்பில் சட்டத்தரணி தர்மராஜா தர்மஜாவின் ஆலோசனைக்கு அமைய சட்டத்தரணிகளான சிபான் மஹ்ஷரூப், சாலினி பெர்ணான்டோ, நெஹன்சா வீரசிங்க, ஹோசதி ஹப்பு ஆரச்சி, அழகரத்னம் ஜினோசன் ஆகியோருடன் சிரேஸ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் ஆஜராகவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்;கது.

spot_imgspot_img

More like this
Related

பல்கலை, உயர்கல்வி நிறுவனங்களில் விடுதி வசதிகளை விரிவுபடுத்த திட்டம்

இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2026...

மதுபானசாலைகளற்ற வலி வடக்கில் மதுபானசாலைக்கு அனுமதியா?” — வீதியில் இறங்கிய மக்கள்

மதுபானசாலைகளற்ற பிரதேசமாக காணப்படும் வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு...

“திலீபன் சிலை எங்கே?” — யாழ் மாநகர சபை அமர்வில் வெடித்த கடும் வாக்குவாதம்!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்