‘ஐஸ்’ (கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன்) போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, இலங்கை பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தமை தொடர்பான பல முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபரையும், அவரிடமிருந்த குறிப்பிட்ட அளவு ‘ஐஸ்’ போதைப்பொருளையும் இன்று (06) காலை கைது செய்தனர்.
தொடர் விசாரணைகளின்போது, துபாயில் போதைப்பொருள் கடத்தல்காரர்களான சதுர திலருக்ஷன் (‘மோதர நிபுண’வின் சகோதரர்) மற்றும் ‘கெசல்வத்தை தினுஷ’ ஆகியோருடன் அவர் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டதைக் காட்டும் காணொளிப் பதிவுகளை விசாரணையாளர்கள் கைப்பற்றினர்.
கடத்தல்காரர்கள் அவரை ‘டாடா’ (Dada) என்ற புனைபெயரால் அழைத்ததும் தெரியவந்துள்ளது. மேலும், தொலைபேசி உரையாடல்கள் மீதான விசாரணையில், ‘இப்பகெவத்தை சுஜி’ எனப்படும் கடத்தல்காரரிடமிருந்து பெற்ற ‘ஐஸ்’ போதைப்பொருளுக்கான பணத்தைச் செலுத்தத் தவறியதற்காக கஹந்தகமவுக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கஹந்தகம வழங்கிய தகவலின் அடிப்படையில், நுகேகொட பகுதியில் 1,100 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இருவரும் நாரஹேன்பிட்டியில் உள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அவர்கள் இன்று (06) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 12ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.




