முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர், செப்டம்பர் 30 அன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வெளியே தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஒருவரால் தாக்கப்பட்டதாகக் கூறி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணைக்குப் பின்னர் விக்ரமசிங்க நீதிமன்றத்தை விட்டு வெளியேறும்போது, நீதிமன்ற வாயிலுக்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிக்கு அப்பாதுகாப்பு உத்தியோகத்தர் பாதுகாப்பு அளித்துக்கொண்டிருந்தபோது, அந்த ஒளிப்பதிவாளர் தனது கமராவால் அவரின் தலையில் தாக்கியதாகக் கட்சி கூறுகிறது. தாக்குதலுக்குள்ளான உத்தியோகத்தர் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அக்கட்சி தெரிவித்தது.
நீதிமன்ற வருகை தொடர்பான செய்திகளைச் சேகரித்துக்கொண்டிருந்த ஏனைய ஊடகவியலாளர்களால் இச்சம்பவம் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அக்கட்சி கூறியது.
நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் போதாமை குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கவலை வெளியிட்டதுடன், விக்ரமசிங்கவுக்குத் தீங்கு விளைவிப்பதற்கான முன் திட்டமிடப்பட்ட சதி ஏதேனும் இருந்ததா என்றும் கேள்வி எழுப்பியது.




