இலங்கையின் மூவின ஊடகவியலாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு சிலோன் மீடியா போரத்தினால் முன்மொழியப்பட்டுள்ள “இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்” (Sri Lanka Journalists Trust Fund) ஸ்தாபிப்பதற்கான உத்தியோகபூர்வ திட்ட அறிக்கை, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் கையளிக்கப்பட்டது.
மாஸ்டர் பேக்கேஜிங் இன்டர்நேஷனல் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் மாஸ்டர் பிரின்டர்ஸ் புதிய கெட்டலொக் வெளியீட்டு விழா நேற்று (17) கல்முனை மயோன் பிலாஸா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத், பொதுச் செயலாளர் நூருல் ஹுதா உமர் மற்றும் பொருளாளர் ஏ.எஸ்.எம். முஜாஹித் ஆகியோரினால் இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம் தொடர்பான திட்ட அறிக்கை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
அத்துடன், சிரேஷ்ட ஊடகவியலாளரும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப், கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மற்றும் முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரிடமும் திட்ட அறிக்கை கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இந்தியா–தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எம்.எம். ஷாஜஹான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்ததுடன், அவரிடமும் இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியத் திட்ட அறிக்கை கையளிக்கப்பட்டது.
மாஸ்டர் பேக்கேஜிங் இன்டர்நேஷனல் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எம். ஜெஸ்மின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் அரசியல், சமூகப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம். முஸ்தபா, பேராசிரியர் எம்.ஐ.எம். ஹிலால் மற்றும் கலாநிதி எம்.ஐ.எம். றியாத் ஆகியோரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் அடிப்படையில் இத்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஊடகவியலாளர்களின் சமூகப் பாதுகாப்பு, நலன் மற்றும் எதிர்காலத் தேவைகளை கருத்திற்கொண்டு முன்மொழியப்பட்டுள்ள இந்நம்பிக்கை நிதியத்தை ஸ்தாபிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிலோன் மீடியா போரம் தெரிவித்துள்ளது.




