மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக் கிராமமான தோணிதாண்டமடுப் பகுதியில் வனவிலங்கு அதிகாரிகளால் மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நிர்வாக எல்லை பிரச்சனை தொடர்பாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இ.சிறிநாத், ஞா.சிறிநேசன் இடையிலான விசேட உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இன்று 11.09.2026 வெள்ளிக்கிழமை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
கடந்த 06.09.2026 அன்று பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த வன இலாகா அதிகாரிகளால் தோணிதாண்டமடு பகுதி மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் தொடர்பில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் அவர்கள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில் இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச் சந்திப்பின் போது தோணிதாண்டமடுக் கிராமமானது பிரதேச செயலகம், கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பொலிஸ் அதிகாரப் பிரிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக எல்லைக்குள் அமைந்திருந்த போதிலும், வன இலாகா திணைக்களத்தின் அதிகார எல்லை பொலன்னறுவை மாவட்டத்தின் கீழ் உள்ளதால் அப்பகுதி மக்கள் விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதார நடவடிக்கைகளில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதோடு மற்றும் சில அதிகாரிகளினால் நெருக்கடிக்குள் உள்ளாவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்கள் சுற்றாடல் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.
இப் பிரச்சினைகளை கேட்டறிந்த சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தி, இது தொடர்பில் திணைக்கள மட்டத்தில் விரிவாக ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும், வரவிருக்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இப் பிரச்சினையை முதன்மைப்படுத்தி, குறித்த கிராமத்தின் வன இலாகா பரிபாலன அதிகாரத்தை மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதாகவும் உறுதியளித்தார்.
இவ் விசேட கலந்துரையாடலில் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்ரன் ஜெயக்கொடி மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.




