ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு சட்டவிரோதமானது – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Date:

ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு சட்டவிரோதமானது – உச்ச நீதிமன்றம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு, தன்னிச்சையானதும் சட்டரீதியாக செல்லுபடியாகாததுமாகும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, கொள்கை மாற்றங்களுக்கான நிலையம் (CPA) மற்றும் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை விசாரித்த பின்னர் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

பிரகீத் எக்னெலிகொட காணாமல்போனமை தொடர்பான வழக்கு, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தபோது, நீதிமன்றத்திற்குள் ஞானசார தேரர் நடந்து கொண்ட விதம் தொடர்பாக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இதனையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும், 2019ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பின் அடிப்படையில், ஞானசார தேரர் வெலிக்கடை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் 19 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்திருந்தது. எனினும், அந்தத் தண்டனைகள் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டியதாக தீர்மானிக்கப்பட்டதால், நடைமுறையில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 5ஆம் திகதி, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் 2016ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி இடம்பெற்ற நீதிமன்ற நடவடிக்கைகளின்போது ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாகக் கண்டறிந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி சிறிசேன வழங்கிய மன்னிப்பு தொடர்பாக CPA மற்றும் சந்தியா எக்னெலிகொட ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், அந்த மன்னிப்பு தன்னிச்சையானது என்றும் சட்டத்தில் செல்லுபடியாகாதது என்றும் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் CPA சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி வீரன் கொரியா, லூயி கணேசதாசன் மற்றும் கியாத்தி விக்ரமநாயக்க ஆகியோர் முன்னிலையாகினர்.

சந்தியா எக்னெலிகொட சார்பில் சட்டத்தரணி அஸ்திக தேவேந்திர, புலஸ்தி ஹேவமன்னே ஆகியோர் முன்னிலையாகியதுடன், அவர்கள் சார்பில் மஞ்சுள பலசூரிய சட்டத்தரணியாக அறிவுறுத்தினார்.

ஞானசார தேரர் சார்பில் சட்டத்தரணி திஷ்ய வெராகொட, சஞ்சய மரம்பே மற்றும் இரேஷ் சேனவிரத்ன ஆகியோர் முன்னிலையாகினர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா மற்றும் புலஸ்தி ரூபசிங்கே ஆகியோர் முன்னிலையாகினர்.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை சாஹிரா மாணவன் மாகாண மட்ட நீளம் பாய்தலில் வெண்கலம். தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான...

தொற்றுநோய் தரவு முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் கல்முனையில் ‘EPINet’ பயிற்சி செயலமர்வு

தொற்று நோய் தொடர்பான தரவுகளை முகாமைத்துவம் செய்வதிலும், பொதுச் சுகாதார சேவைகளின்...

நாடு சார்ந்த மனித உரிமை ஆணைகள் காலவரையின்றி தொடரக் கூடாது – ஐ.நா.வில் இலங்கை வலியுறுத்தல்

நாடு சார்ந்த மனித உரிமை ஆணைகள் காலவரையின்றி தொடர அனுமதிக்கக் கூடாது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்