மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகள் மற்றும் கரையோர பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மீனவர்களின் நலன் கருதி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக பேசுவதில்லை எனவே இந்த விடையத்தில் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஈ.பி.டி.பி.கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
ஈழ மக்கள் ஜனநாயக ஊடக மாநாடு இன்று வெள்ளிக்கிழமை (04) இடம்பெற்றது இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகள் மற்றும் கரையோர பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மீனவர்களின் நலன் கருதி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக பேசுவதில்லை. இதனால் மனவேதனை அடைந்துள்ளோம்.
கிழக்கு மாகாணத்தில் அதிக மீனவர்களை கொண்ட மீனவர் சங்கமான பாலமீன்மடு, திராய்மடு மீனவர் சங்கம் இந்த சங்கம் 1990 ம் ஆண்டு ஜனாதிபதி விருதை பெற்ற பெரிய ஒரு சங்கமாகும்
இவ்வாறான நிலையில் பாலமீன்மடு மீன் சந்தையில் அதிகாலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் 300 மீன்பிடி படகுகள் மீன்களுடன் தரித்து நின்று வியாபாரத்தில் ஈடுபடும் ஒரு பிரதான தளம் இந்த மீன் சந்தை கட்டிடம் இன்று இடிந்து விழும் நிலையில் உள்ளது
இது தொடர்பாக பல தடவைகள் மாவட்டத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடற்றொழில் திணைக்களம் மற்றும் கடந்த கால ஆட்சியில் அபிவிருத்தி குழு தலைவர் என்ற போர்வையில் இருந்த இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் உட்பட அனைவருக்கும் எழுத்து மூலமாக சங்கம் கோரிக்கையை முன்வைத்தது.
இது தொடர்பாக இதுவரை எந்தவிதமான நடவடிக்கையை எடுக்கவில்லை என மன வேதனையுடன் தெரிவிக்கின்றோம். அதேவேளை இன்று நடந்து வரும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தை ஆரம்பித்து வைப்பதும் அதை முடித்து வைப்பதும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இவர் இன்று மக்கள் வரிப்பணத்தில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.
இவருக்கு எங்கெல்லாம் வாக்கு வங்கி இருக்கின்றதே அந்த பிரதேசத்தில் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி துரிதமாக அபிவிருத்தி செய்து வருகிறார். அவருக்கு வாக்கு வங்கி இல்லாத பிரதேசங்களை அக்கறை செலுத்துவதில்லை.
இது மறைமுகமாக இரா.சாணக்கியனுக்கு வாக்களித்தால் உங்கள் ஊர்களை அபிவிருத்தி செய்வார் என்ற ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கும் ஒரு திட்டமாக தான் இதை கருதுகிறேன்.; எனவே இந்த விடையத்தில் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அதேவேளை பாலமீன்மடு 60 மீனவர் குடியேற்றத் திட்டத்தில் உள்ள மக்கள் குடிநீர், மலசல கூடம், மின்சாரம் போன்ற அடிப்படை வசதியின்றி ஓலைக்குடிசையில் நகரை அண்டி வாழ்ந்து வருகின்றனர் இது தொடர்பாக இதற்கு முதல் ஊடகங்கள் ஊடாக சுட்டிக்காட்டியிருந்தேன் இன்று வரை அரசாங்க அதிபரே. அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை
எனவே இந்த பாலமீன்மடு மீனவர் 60 வீட்டுத்திட்ட மக்கள் பிரச்சனை பாலமீன்மடு மீன் சந்தை புனரமைப்பு, இறங்குதுறை புனரமைப்பு. மற்றும் மட்டக்களப்பு பிரதான வாவியை மீனவர்களின் நலனுக்காக அகலப்படுத்தி ஆழப்படுத்தி புனரமைக்க வேண்டியது தொடர்பாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்ட அபிவிருத்தி குழுவில் பேச வேண்டியது உங்கள் கடமை என்றார்.




