இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
வாசுதேவ நாணயக்காரவின் அரசியல் வாழ்க்கை மற்றும் நாட்டிற்கான அவரது பங்களிப்பை பதிவு செய்யும் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய காலத்தை நினைவுகூர்ந்த பிரதமர், சில விடயங்களில் இருவரும் ஒரே கருத்தைக் கொண்டிருந்ததாகவும், சில அரசியல் விடயங்களில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.
எனினும், இலங்கையின் இடதுசாரி அரசியல் இயக்கத்திற்கு வாசுதேவ நாணயக்கார ஆற்றிய பங்களிப்பை தாம் எப்போதும் மதித்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும், அவரது நீண்டகால அரசியல் பயணம் மற்றும் அனுபவங்கள் குறித்து அவருடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் உரையாடியதாகவும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.
“இலங்கை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்திய அவரைப் போன்றவர்களைப் பற்றி எதிர்கால தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும்” என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.




