ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் — பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில்

Date:

ஆலிம்களும் சமூகத்தின் அறிவுசார் வளமாக விளங்கும் புத்திஜீவிகளும் இணைந்து செயற்பட்டு, சமகால சவால்களுக்கு மத்தியில் சமூகத்தை சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் என இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் தெரிவித்தார்.

காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற காத்தான்குடி ஐக்கிய மீலாத் விழா, அமைப்பின் பத்தாண்டு நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு–கௌரவிப்பு விழா ஆகிய முப்பெரும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய பேராசிரியர் பாஸில், மீலாத் விழா என்பது வெறுமனே ஒரு கொண்டாட்டமாக மட்டுப்படுத்தப்படாமல், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் உயரிய பண்புகளையும் முன்மாதிரியான வாழ்க்கையையும் நினைவுகூர்ந்து, அவற்றை தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிமொழியை மேற்கொள்ளும் சந்தர்ப்பமாக அமைய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

காத்தான்குடி கல்வி, வர்த்தகம், கைத்தொழில் மற்றும் பண்பாடு உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளதுடன், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் சமூக ஒருமைப்பாடு மற்றும் வர்த்தகத் திறன் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் ஏற்பட்ட மத ரீதியான முரண்பாடுகள் மற்றும் கருத்து வேறுபாடுகளிலிருந்து ஆக்கபூர்வமான பாடங்களை கற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் ஒற்றுமை, சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஆலிம்கள் வெறுமனே மார்க்கச் சடங்குகளுக்கு வழிகாட்டுபவர்களாக மாத்திரம் தமது பணிகளை மட்டுப்படுத்தாமல், சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் வழிகாட்டும் முக்கிய பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் பேராசிரியர் எம்.எம். பாஸில் வலியுறுத்தினார்.

குடும்பப் பிரச்சினைகள், இளைஞர்களின் உளவியல் சவால்கள், போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சமகால சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ள ஆலிம்கள், உளவியலாளர்கள், கல்வியியலாளர்கள், சமூகப் பணியாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

அதேபோன்று, இளைஞர்களின் கல்வி, தொழில், தொழில்நுட்பம், தொழில் முனைப்பு மற்றும் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துவதிலும் ஆலிம்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

காத்தான்குடியின் எதிர்கால முன்னேற்றத்திற்காக உலமாக்களின் மார்க்க அறிவு, புத்திஜீவிகளின் அறிவு, இளைஞர்களின் ஆற்றல், பெற்றோரின் அர்ப்பணிப்பு மற்றும் சமூக நிறுவனங்களின் ஒத்துழைப்பு ஆகியன ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் பேராசிரியர் பாஸில் தெரிவித்தார்.

நிகழ்வில் பரிசில்களையும் சான்றிதழ்களையும் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், அவர்களின் திறமைகளை அடையாளங்கண்டு ஊக்குவிக்கும் அமைப்பின் நிர்வாகிகள், உலமாக்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகளுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

நிகழ்வு, அறிவு, ஆன்மீகம், ஒற்றுமை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் புதிய தொடக்கமாக அமைய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்