நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

Date:

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது. 800-க்கும் மேற்பட்டோர் காணாமல் போன நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் திபெத்தை ஒட்டிய நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டேகோஷி ஆற்றில் நேற்று (புதன்கிழமை) காலை ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக அப்பகுதியில் இருந்த வீடுகள், கடைகள், விடுதிகள், அரசு கட்டிடங்கள், பாலங்கள் என பல்வேறு கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓடியபோதிலும், பலர் சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். வீடுகளுக்குள் இருந்தவர்களும் வீட்டோடு அடித்துச் செல்லப்பட்டனர்.

ஆற்று நீரோடு, மண், கற்கள், கட்டைகள், கட்டுமானப் பொருட்கள் என பலவும் அடித்துச் செல்லப்பட்டதால், கழிவுப்பொருட்கள் நிறைந்த ஆவேச ஆறாக போட்டேகோஷி ஆறு மாறிப்போனது. உயிர்ச் சேதத்தையும் பொருட்சேதத்தையும் இது பெருமளவில் ஏற்படுத்தி உள்ளது. இதில், 359 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 800-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நேபாள காவல்துறை செய்தித் தொடர்பாளர் அபி நாராயண், “வியாழக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. 8 மாவட்டங்களில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ரசுவா மாவட்டத்தில் 17 உடல்களும், நுவாகோட் மாவட்டத்தில் 28 உடல்களும், தடிங் மாவட்டத்தில் 33 உடல்களும், சித்வான் மாவட்டத்தில் 132 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

கோர்கா மாவட்டத்தில் 30, தனஹுன் மாவட்டத்தில் 22, கிழக்கு நவல்பராசி மாவட்டத்தில் 82, மேற்கு நவல்பராசி மாவட்டத்தில் 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. அதோடு, வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றன.

காணாமல் போனவர்களைத் தேடுவதிலும், குப்பைகள் மற்றும் வெள்ளச்சேதங்களால் அடைபட்டுள்ள சாலைகளைச் சீரமைப்பதிலும் பொதுமக்களுடன் இணைந்து அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு தொலைத் தொடர்பு வசதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், அங்கு சிக்கியுள்ளவர்கள் மற்றவர்களை தொடர்பு கொள்வதிலும், மற்றவர்கள் அவர்களை தொடர்பு கொள்வதிலும் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது.

வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட இடம், கைலாய யாத்திரை செல்வோருக்கான முக்கிய பாதை என்பதால் இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி இலங்கை, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அவர்கள் குறித்த விவரங்கள் இதுவரை நேபாள அரசால் வெளியிடப்படவில்லை.

இதேபோல், காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால், கயிலாய யாத்திரைக்குச் சென்றவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மிகுந்த துயரத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

இதனிடையே, கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காகச் சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் நேபாளத்தில் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதா?

போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப் பெருக்குக்கு நேபாளம் – சீனா எல்லைக்கு அருகில் உள்ள லெண்டே ஆற்றில் பனிப்பாறை ஏரி ஒன்று உடைந்ததே காரணம் என நேபாளத்தின் நீரியல் மற்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஒரு பனிப்பாறை ஏரி உடைந்தது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இமயமலைப் பகுதி முழுவதும் 3,624 பனிப்பாறை ஏரிகள் உள்ளதாகவும், இவற்றில் 47 ஏரிகள் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன. இதில், 21 ஏரிகள் நேபாளத்தில் உள்ளன. எனினும், பேரிடர் நிகழ்ந்த குறிப்பிட்ட அந்த இடத்தில் பனிப்பாறை சரிவு ஏற்படும் என்பது குறித்து எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_imgspot_img

More like this
Related

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்