வடக்கின் போக்குவரத்து மற்றும் வாகனத் துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில், வடமாகாணத்தின் மிகப்பெரிய மோட்டார் வாகனக் கண்காட்சியான AUTO X – Jaffna Motor Show 2026, எதிர்வரும் செப்டம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களால் வெளியிடப்பட்டது.
மேலும், முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர்களான Evolution Events and Corporate Services (Pvt) Ltd நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மூன்று நாள் கண்காட்சிக்கு, 15,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே கூரையின் கீழ் வாகனத் துறையின் முன்னணி நிறுவனங்கள்
இக்கண்காட்சியில் 35 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள்
வாகன விற்பனையாளர்கள் நிதி மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் நவீன போக்குவரத்து மற்றும் இயக்கத் தீர்வுகளை வழங்கும் நிறுவனங்கள்
ஆகியவை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணையவுள்ளன.
இதன் மூலம், வாகன ஆர்வலர்கள் மற்றும் புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பவர்கள் சந்தையில் கிடைக்கக்கூடிய நவீன போக்குவரத்து தீர்வுகளை ஒரே இடத்தில் பார்வையிட்டு, ஒப்பிட்டு, நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேரடியாகக் கலந்துரையாடச் சிறந்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
காட்சிப்படுத்தப்பட உள்ள வாகனங்களும் சிறப்பு அம்சங்களும்
கண்காட்சியில் கார்கள், SUV வாகனங்கள், வேன்கள், லொறிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான போக்குவரத்து முறைகள் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், மின்சார வாகனங்கள், மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பல்வேறு மின்சாரப் போக்குவரத்து தீர்வுகளும் கண்காட்சியில் சிறப்பாக இடம்பெறவுள்ளன.
மேலும், வாகனக் கொள்வனவாளர்கள் ஒரே இடத்தில் பல வாகனங்களை அனுபவிப்பதுடன், வாகன விற்பனையாளர்களுடன் நேரடியாகக் பேசி நிதி வசதிகள் தொடர்பான வாய்ப்புகளையும் இலகுவாக ஆராய முடியும்.
வாகன ஆர்வலர்கள், குடும்பங்கள், வர்த்தக உரிமையாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் இக் கண்காட்சியால் பயனடையலாம்.
கண்காட்சியின் உத்தியோகபூர்வ ஆரம்பத்திற்கு முன்னதாக, செப்டம்பர் 3, 2026 அன்று யாழ்ப்பாண நகரை உற்சாகப்படுத்தும் வகையில் பிரமாண்டமான சிறப்பு வாகன அணிவகுப்பு நடைபெறவுள்ளது.
கண்காட்சியின் மூன்று நாட்களிலும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் பங்கேற்புடன் விறுவிறுப்பான சிறப்பு மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களுக்குப் புதியதொரு அனுபவத்தைத் தரும் வகையில் நடத்தப்படவுள்ளன.
சர்வதேச நல்லூர் திருவிழாக் காலத்துடன் இணைப்பு
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா காலப்பகுதியுடன் இக்கண்காட்சி கைகோர்ப்பது இதன் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதனால், வடமாகாண பொதுமக்கள் மட்டுமன்றி, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் இலட்சக்கணக்கான மக்களும் இக்கண்காட்சியில் பெருமளவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.




