தனது தேனிலவுக்கு செலவிடுவதற்காக ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமான ஏடிஎம் அட்டைகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 26 வயதுப் பெண் ஒருவரை அத்துருகிரிய பொலிசார் கைது செய்துள்ளனர்.
அந்தத் தொழிலதிபரின் கட்டுமானத் தளத்தில் கொத்தனாராகப் பணிபுரிந்த அப்பெண்ணின் காதலனின் தூண்டுதலின் பேரிலேயே இந்தத் திருட்டு நடந்துள்ளது என விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு வணிகத் தேவைக்காக கொழும்புக்கு வந்த தனது மனைவிக்கு ஓர் இரவு தங்குவதற்கு இடம் அளிக்குமாறு அந்த கொத்தனார் தொழிலதிபரிடம் கோரியிருந்தார். அவர் வீட்டில் தனியாக வசிப்பதால், அந்த இளம் பெண்ணும் அவரது தாயாரும் உடன் வந்தால் மட்டுமே தங்குமிடம் அளிக்க முடியும் என்று தொழிலதிபர் அவரிடம் தெரிவித்திருந்தார். அதன்படி, அந்த இளம் பெண்ணையும் அவரது தாயாரையும் தொழிலதிபரின் வீட்டிற்கு அழைத்து வந்த கொத்தனார், தொழிலதிபரின் ஏடிஎம் அட்டைகளைத் திருடுமாறு அந்த இளம் பெண்ணுக்கு அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
மறுநாள் காலை, அந்த இரு பெண்களும் இரண்டு ஏடிஎம் அட்டைகளை திருடிக்கொண்டு, சந்தேகத்திற்குரிய கொத்தனாரைச் சந்திப்பதற்காக அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர், அவர்கள் அந்த அட்டைகளைப் பயன்படுத்தி முதலில் ரூ. 50,000 ரூபாயை வங்கியில் பெற்று, திருமணத்தைப் பதிவு செய்த பின்னர், அவர்கள் வடுவ பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தேனிலவுக்குச் சென்றனர்.
இதற்கிடையில், வெலிகமவுக்குப் பயணம் செய்து கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் கொத்தனார், வெலிகம பொலிஸாரால் பிடியாணையின் பேரில் கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடமிருந்து சட்டவிரோத போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன. தனது கூட்டாளி பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட பின்னர், மாத்தறை பகுதிக்குச் சென்றிருந்த அந்த இளம் பெண், திருடப்பட்ட ஏடிஎம் அட்டைகளைப் பயன்படுத்தி பணம் எடுத்ததுடன், இரண்டு கைபேசிகள் மற்றும் நகைகளையும் வாங்கியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய அத்துருகிரிய பொலிஸ், வங்கி வளாகத்தில் உள்ள சிசிடிவி கமரா காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், சந்தேக நபரை அடையாளம் கண்டு அவரைக் கைது செய்தனர். ஹம்பாந்தோட்டை, சிறிபுரத்தைச் சேர்ந்த அந்த இளம் பெண், ஒரு குழந்தைக்குத் தாய் என்பது தெரியவந்துள்ளது.




