கேரளக் கடற்கரைக்கு அருகே மூழ்கிய MSC Elsa 3 கப்பலிலிருந்து கடலில் சிந்தி கரையொதுங்கிய பிளாஸ்டிக் துகள்களில் (Plastic Pellets) இதுவரை 43-க்கும் மேற்பட்ட கொள்கலன்களுக்கு இணையான அளவு சேகரிக்கப்பட்டுள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) தெரிவித்துள்ளது.
MEPA தலைவர் சமந்த குணசேகர தெரிவிக்கையில், யாழ்ப்பாணத் தீவுகளிலிருந்து காலி வரை உள்ள கடற்கரைகளில் பிளாஸ்டிக் துகள்கள் தொடர்ந்து கரையொதுங்கி வருவதாகவும், தென்மேற்கு பருவமழை காரணமாக நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகவும் கூறினார்.
இந்த பிளாஸ்டிக் துகள்களை அகற்றுவதற்காக சுமார் 1,800 தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கான அனைத்து செலவுகளையும் சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், கப்பல் மூழ்கியதால் இலங்கையின் கடல் சூழலமைப்பிற்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டு தொகையை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவும் நேற்று ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியதாக MEPA தலைவர் தெரிவித்தார்.
லைபீரியக் கொடியுடன் பயணித்த MSC Elsa 3 என்ற கொள்கலன் கப்பல், 2025 மே 25 அன்று இந்தியாவின் கேரளக் கடற்கரையிலிருந்து சுமார் 38 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்தபோது நீர் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மூழ்கியது. சம்பவம் நிகழ்ந்தபோது அந்தக் கப்பலில் 643 கொள்கலன்கள் இருந்தன.




