இனப்படுகொலை வரலாற்றுத் தடயங்களை நாமே அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என்று விமர்சிப்பது பெரும் அபத்தம் பொ. ஐங்கரநேசன் காட்டம்!

Date:

“இளைய தலைமுறை தமிழ்த்தேசிய அரசியலுடன் இல்லை அவர்களுக்கு எமது போராட்டத்தின் வரலாறும்,
நாம் பட்ட வதைகளும் வலியும் தெரியாது” என்று இளைய தலைமுறை மீது நாம் குற்றம் சுமத்தி வருகிறோம்.
அவர்களை வரலாறு தெரியாதவர்களாக ஆக்கியது யார்? நாமல்லவா ? தமிழ் இனப்படுகொலையின்
வரலாற்றுத் தடயங்களை நாமே மூடி மறைத்துக் குழிதோண்டிப் புதைத்து அழித்துவிட்டு இளையோரை
வரலாறு தெரியாதவர்கள் என்று விமர்சிப்பது பெருத்த அபத்தம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின்
தலைவர் பொ. ஐங்கரநேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு நேற்று புதன்கிழமை (29.07.2026)
கொக்குவில் அறிவாலய மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து
உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஈழத்தமிழர்களின் அறிவுக் கருவூலமாகத் திகழ்ந்த தென்னாசியாவின் மிகப்பெரும் நூலகங்களில் ஒன்றான
யாழ்ப்பாணப் பொதுநூலகம் 1981ஆம் ஆண்டு எரியூட்டி அழிக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின்
பாரம்பரியத்தை விளக்கும், வேறு எங்கும் காணக்கிடைக்காத வரலாற்று ஆவணங்களும் ஓலைச்சுவடிகளும்
தீக்கு இரையாக்கப்பட்டன. இந்த நாசகாரியத்தை தென்னிலங்கை அரசியல்வாதிகளின் மேற்பார்வையில்
அரச படைகளே அரங்கேற்றியது. நமது வரலாற்றில் நாம் சந்தித்த மிகப்பெரும் பண்பாட்டுப் படுகொலை
இது. ஒரு வரலாற்றுக் கடத்தியாக எரியுண்ட நூலகத்தை அதே நிலையில் நாம் பேணிப்பாதுகாத்திருக்க
வேண்டும். ஆனால், ஒரு வரலாற்றுத் தவறாக நூலகத்தைப் புனரமைத்து நடந்தது எதுவுமே தெரியாதவாறு
வெள்ளையடித்து பேரினவாத அரசைப் பாதுகாக்கும் வரலாற்றுப் பிழையையே நாம் இழைத்தோம்.
இலங்கையில் தமிழினம் மீது 1956 இல் நிகழ்த்தப்பட்ட கல்லோயாப் படுகொலை தொடங்கி 2009 இல்
நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலைவரை பல தடவைகள் இனவழிப்புக்கு ஆளாகியுள்ளது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு முன்பாக, 1983இல் நிகழ்த்தப்பட்ட ‘கறுப்பு ஜீலை’
தமிழினப்படுகொலையே அதிகூடிய எண்ணிக்கையான உயிரிழப்புகளையும், பலகோடிப்பெறுமதியில்
சொத்திழப்புகளையும் ஏற்ப்படுத்திய முதலாவது இனப்படுகொலையாகும். இதுவே உலகின்
மூலைமுடுக்கெல்லாம் தமிழ் மக்களை எதிலிகளாக இடம்பெயரவைத்த முதலாவது படுகொலையுமாகும்.
ஆனால் இவற்றையெல்லாவற்றையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லக்கூடிய நினைவுச்
சின்னங்களை இதுவரையில் நாம் அமைக்க முற்படாததும் பெரும் வரலாற்றுத் தவறே. செம்மணிப்
புதைகுழியிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் எலும்புக்கூடுகளுக்கும் நாளை இதே நிலை
ஏற்பட்டுவிக்கூடாது.
இனப்படுகொலைக்கு ஆளான ஒரு சமூகம் வரலாற்றை நினைவுகூரும் விதமாகச் சின்னங்களை, நிறுவுவது
இன்றியமையாதது. இவை வெறுமனே அழுது அரற்றி மனதை ஆற்றுவதற்கான இடங்கள் அல்ல. அடுத்த
தலைமுறைகளுக்குக் கடந்தகால உண்மைகளைக் கடத்துகின்ற வரலாற்றுப் பாடசாலைகளாகவும் உள்ளன.
நீதிக்கான தொடர் போராட்டங்களின் எரிசக்தியாகவும் இவை விளங்குகின்றன. ஒரு பொது வெளியில்
எழுப்பப்படும் நினைவாலயம் குற்றவாளிகள் தங்களை நியாயப்படுத்திக் கொள்வதைத் தடுத்து அவர்கள்
மீதான பொறுப்புக்கூறலைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கும். இந்த முக்கியத்துவங்களைக்
கருத்திற்கொண்டு இனவழிப்பின் தடயங்களை நினைவுச்சின்னங்களாகவோ, நினைவு வளாகமாகவோ, ஓர்
ஆவணக்காப்பகமாகவோ பேணிப்பாதுகாக்க இனிமேலாவது முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

MSC Elsa 3 கப்பல் விபத்து: கடலில் சிந்திய பிளாஸ்டிக் துகள்களில் 43-க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் சேகரிப்பு

கேரளக் கடற்கரைக்கு அருகே மூழ்கிய MSC Elsa 3 கப்பலிலிருந்து கடலில்...

இலங்கை வந்த பாலஸ்தீன யுவதிக்கு ஏற்பட்ட சோக முடிவு

பென்டாரா சுற்றுலாப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதற்காகப் பறந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்