யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், முன்னாள் மாணவிகள், முகநூல், ரிக் ரொக் மற்றும் யூடியூப் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட 14 பேரை எதிர் மனுதாரர்களாக கொண்டு பருத்தித்துத்துறை நீதவான் நீதிமன்றில் நிகழ் நிலை காப்பு சட்டத்தின் கீழ் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும் இரண்டு வருட காலமாக தற்காலிக உதவி விரிவுரையாளராகவும் கடமையாற்றிய பெண் ஒருவர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்ததை அடுத்து, பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்ரமணியம் ரகுராம் குறித்த முன்னாள் மாணவியுடன் உரையடாடிய தொலைபேசி ஒலிப்பதிவு என சில ஒலிப்பதிவுகள் ரிக்ரொக் தளம் மற்றும் முகநூல்களில் பகிரப்பட்டன.
அதன் அடிப்படையில் சிலரால் முகநூல்களிலும் யூடியூப் தளத்திலும் கருத்துக்கள் பகிரப்பட்டன.
இந்நிலையிலையே, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் நிகழ்நிலை காப்பு சட்டத்தின் பிரிவு 20இன் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராமால் கடந்த முதலாம் திகதி வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் 14 பேர் எதிர் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்
குறித்த 14 பேரில், சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மாணவி, அவரது நண்பியான முன்னாள் மாணவி, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோருடன் இடையீட்டாளர்களாக யூடியூப் , ரிக்ரொக் , பேஸ்புக் ஆகியவை மனுதாரர் தொடர்பிலான தடை செய்யப்பட்ட கூற்றுக்களை பிரசுத்தமைக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
குறித்த வழக்கில் நிபந்தனையுடனான கட்டளையை பிறப்பிப்பதா ? இல்லையா என்பதனை முடிவு செய்வதற்காக வழக்கினை இன்றைய தினம் வெள்ளிக்கிழமைக்கு திகதிக்கு மன்று திகதியிட்டு இருந்தது.
அதன் அடிப்படையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, எவ்வித கட்டளைகளும் வழங்கப்படாது , வழக்கினை எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என மன்று திகதியிட்டுள்ளது.




