நேற்று (05) மாலை, நீர்கொழும்பு சிறைக்குள் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்த ஒரு குழுவிற்கும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறிக்கொண்ட ஒரு குழுவிற்கும் இடையே நடந்த மோதலில், இரண்டு கைதிகள் உயிரிழந்தனர் மற்றும் 33 கைதிகள் காயமடைந்து நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நீர்கொழும்பில் உள்ள “டூம்” மற்றும் “அடா” என்ற இரு கும்பல்களின் தலைவர்கள் துபாயில் இருப்பதாகவும், பல அடியாட்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும் பாதுகாப்புப் படைகள் கண்டறிந்துள்ளன.
“டூம்” என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் தந்தையும், அவருக்கு நெருக்கமான ஒரு குழுவும் சிறையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக மற்றொரு தரப்பினர் சிறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து இந்த மோதல் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
“அடா” மற்றும் “டூம்” ஆகிய இரு பிரிவுகளின் குழுக்களுக்கும், சிறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படும் குழுவிற்கும் இடையே இந்த மோதல் நிகழ்ந்ததாகவும், இதில் இருவர் உயிரிழந்ததாகவும், 33 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயங்களுடன் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 33 பேரில், இருவர் படுகாயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில், தடிகளும் கூர்மையான ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டன. நிலைமையைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை சிறப்புப் பிரிவு சிறைக்குள் நுழைந்தது. சிறைச்சாலையைப் பாதுகாக்க நீர்கொழும்பு பொலிஸாரும், பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மேலும் இரண்டு கைதிகள் தப்பிச் சென்றதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கைதிகளின் பாதுகாவலர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சியுடன் சிறைக்கு வந்து, தங்கள் குடும்பங்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறு சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதேவேளை, சிறைக்குள் மோதல் வெடித்ததை தொடர்ந்து பெண் கைதிகள் குழுவொன்று சிறைச்சாலை கட்டிட கூரை மேதேறி போராட்டத்தில் ஈடுபட்டது. அதை தொடர்ந்து ஆண்கள் கைதி குழுவொன்றும் போராட்டத்தில் ஈடுபட்டது.




