காதார விழிப்புணர்வில் மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்: பிராந்திய பணிப்பாளர் தெரிவிப்பு

Date:

கல்முனை பிராந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும், பொதுச் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்த நிகழ்வை, பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர் ஒருங்கிணைப்பு செய்திருந்தார். இக்கலந்துரையாடலில் ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரதேச மட்ட தலைவர்கள், கிறிஸ்தவ மதகுருமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, தற்காலத்தில் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டிய மிக முக்கிய பொதுச் சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து, கலந்துரையாடப்பட்டதுடன் அது தொடர்பில் பிராந்திய பணிப்பாளர் அவர்களினால் விளக்கக்காட்சிகள் (Presentations) மூலம் விளக்கமளிக்கப்பட்டன. கல்முனை பிராந்தியத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துதல், தடுப்பூசி (Vaccination) ஏற்றல் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் காணப்படும் தேவையற்ற சந்தேகங்களை களைதல். முறையற்ற திண்மக் கழிவகற்றலினால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகளைத் தடுத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்.

பொதுமக்களுக்குக் கிடைக்கும் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல், பிராந்தியத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் என மிக முக்கிய விடயங்கள் குறித்து விளக்கமளித்த பணிப்பாளர், சமூக மாற்றத்தில் மதத் தலைவர்களின் பங்களிப்பு மற்றும் முக்கியத்துவம் பற்றியும் விவரித்தார்.

மேலும் இது தொடர்பில் பொதுமக்களுக்கு தொடர்ச்சியான விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை சமூக மட்டத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்க, மக்களிடையே நம்பிக்கையும் மதிப்பும் பெற்றுள்ள மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். மதத் தலைவர்கள் மூலமாக வழங்கப்படும் அறிவுரைகள் மக்களை எளிதில் சென்றடையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த மதத் தலைவர்கள், பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி, மேற்கொள்ளப்படும் பொதுச் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்னெடுக்கும் சகல வேலைத்திட்டங்களுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கி செயற்பட, தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தனர்.

கல்முனை பிராந்திய வரலாற்றில் சுகாதாரத் துறையினரும், சகல மதத் தலைவர்களும் ஒன்றிணைந்து மக்களுடைய பொதுச் சுகாதாரம் குறித்து கலந்துரையாடிருப்பது இதுவே முதன்முறையாகும். எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான சந்திப்புக்களை ஒழுங்கு செய்து, பிராந்திய மக்களின் பொதுச் சுகாதாரப் பிரச்சினைகளை கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வுகளை வழங்குவதெனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...

வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்!

“சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்