சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சவுதி எரிசக்தி அமைச்சக அதிகாரியை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட தகவலின்படி, சவுதி அராம்கோ (Saudi Aramco) நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை ராஸ் தனுரா (Ras Tanura) பகுதியில் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 14 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து உள்ளூர் நேரப்படி அதிகாலை 6.00 மணியளவில் (03:00 GMT) இடம்பெற்றதாகவும், உயிரிழந்த அனைவரும் சவுதி பிரஜைகள் எனவும் சவுதி செய்தி நிறுவனம் (SPA) தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சவுதி அதிகாரிகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் காரணமாக சுமார் நான்கு மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த ராஸ் தனுரா எண்ணெய் முனையத்தில், சவுதி அராம்கோ கடந்த வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி நடவடிக்கைகளைத் தொடங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.




